பதிவு செய்த நாள்
25
பிப்
2020
12:02
திருமூர்த்திமலை: பிரசித்தி பெற்ற கோவிலின் மூலகோபுரம் திருச்சப்பரமாக அமைந்து, ஆண்டுதோறும், அச்சப்பரத்தை மாற்றியமைக்க, வனப்பகுதியிலுள்ள மலைவாழ் கிராமம் முதல் மக்கள் திரண்டு கொண்டாடும் வைபவம் திருமூர்த்திமலையில், தனிச்சிறப்பாக, இன்றும் தொடர்கிறது.மேற்குத்தொடர்ச்சிமலையில், பசுமை சூழ்ந்த மலைகளுக்கு மத்தியில், ஓடி வரும் பஞ்சலிங்கம் அருவி, மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
அத்திரி முனிவர், அனுசுயை, திரிசங்கு, அரிச்சந்திரன், நளன், முகுந்தன், இந்திரன், நாரதர், தர்மர் என முனிவர்கள், தேவர்கள் வழிபட்ட புண்ணிய தலம் என்ற சிறப்பும் உண்டு.கோவில் வளாகத்தில், விநாயகர், முருகன், நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆயிரம் கால் மண்டம், யானை உருவம் காணப்படும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பம் உள்ளது.கோவிலில், தை மற்றும் ஆடி பட்ட சாகுபடிக்கு முன், அமாவாசை தினத்தில், மாட்டு வண்டி கட்டி வந்து, சுவாமி தரிசனம் செய்து, சாகுபடி பணியை துவக்குகின்றனர் விவசாயிகள். அதே போல், மகா சிவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் கருவறை, மூலவர் சன்னதி கோபுரம், முன் மண்டபம் அமைத்திருக்கும். இக்கோவிலில் உள்ள, முருகன், விநாயகர் உள்ளிட்ட உப சன்னதிகளின் மூலவர் கோபுரம், கட்டுமானமாக உள்ளது. ஆனால், மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரம், பல நுாறு ஆண்டுகளாக, பொதுமக்களால் மகா சிவராத்திரியன்று கொண்டு வரப்படும் திருச்சப்பரமே அலங்கரித்து வருகிறது.
திருச்சப்பர வரலாறு: சமணம் வளர்ந்த போது, சைவம், வைணவம் என பிரிந்து கிடந்த போது, அரியும் சிவனும் ஒன்று என்ற அடிப்படையில், மும்மூர்த்திகளும் எழுந்தருளிய கோவிலாகும்.பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக வழிபாட்டில் உள்ள இக்கோவிலில், மூலவர் கோபுரம் ஆண்டுக்கு ஒரு முறை மாறுவது சிறப்பு அம்சமாகும். பல லட்சம் பக்தர்கள் வந்தாலும், இன்றும் நிரந்தர கோபுரம் அமைக்க மும்மூர்த்திகள் உத்தரவு கிடைக்கவில்லை. சிவாலயங்களில் சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கும் நிலையில், மும்மூர்த்திகள் எழுந்தருளும் இக்கோவில் வித்தியாசமாக நடக்கிறது. முழுவதும் மரங்களால், மூன்று நிலைகளுடன், தானியங்களாலான மூன்று கலசங்கள் என அற்புதமாக, திருச்சப்பரம் தயாரிக்கப்படுகிறது.
விளைபொருளுடன்... பூலாங்கிணர் கிராமத்தில், திருமூர்த்திமலை மகா சிவராத்திரி விழாவிற்காக திருச்சப்பரம் தயார் செய்யப்படுகிறது. பக்தர்கள் வழிபாடு செய்து, திருச்சப்பரத்தை பக்தியுடன் தோளில் சுமந்து எடுத்துச்செல்கின்றனர்.நெற்கதிர்கள், வாழைப்பழம், தேங்காய், நெல், மொச்சை, சுண்டல், கொள்ளு, பாசிப்பயறு, மக்காச்சோளம் என சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் என விளைபொருட்களை, சுவாமிக்கு படைத்து வேளாண் வளம் சிறக்க வழிபடுகின்றனர். அதோடு, உப்பு, மிளகு உள்ளிட்ட விளை பொருட்களை, திருச்சப்பரம் மீது வீசி வழிபடுகின்றனர். பூலாங்கிணரில் துவங்கி, வாளவாடி, தளி, திருமூர்த்திநகர் என வழியோர கிராமங்கள் வழியாக, பக்தர்கள் திருச்சப்பரம் எடுத்துச்செல்கின்றனர்.
மலைவாழ் மக்கள்: திருச்சப்பரம் திருமூர்த்தி மலை சென்றதும், கோவில் எல்லையான, யானை உரசும் பாறை அருகே, மலைமேல் உள்ள குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை சேர்ந்த மலைவாழ் மக்கள், திருச்சப்பரத்தை பெறுகின்றனர்.வனங்களில் சேகரித்த தேன், தினை, மூங்கில் அரிசி, விளைவித்த மொச்சை, பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளையும் படையலிடுகின்றனர்.மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை முழங்க, பாரம்பரிய நடனமாடி, கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.அங்கு, திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பயபக்தியுடன் மும்மூர்த்திகள் மூலவர் சன்னதி கோபுரமாக, திருச்சப்பரம் ஏற்றப்படுகிறது.சப்பரத்துடன், பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து, மகா சிவராத்திரி விழாவை, பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த, 21ம் தேதி இரவு மகா சிவராத்திரி விழாவில் பாரம்பரிய பாதுகாக்கப்பட்டு, திருச்சப்பரம் கோபுரமாக நிறுவப்பட்டது.