பதிவு செய்த நாள்
26
பிப்
2020
11:02
விருதுநகர் : விருதுநகரில் உள்ள பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இங்குள்ள திருத்தேர் மழை வெயிலில் காயும் நிலையில் , வளாக தரைத்தளம் பெயர்ந்து நடந்தாலே கால்களை பதம்பார்க்கிறது. கோயில் சொத்துக்கள் ,கடை வாடகை என வருவாய் அதிகம் இருந்தும் எதையும் கண்டுக்காத அறநிலையத்துறை தங்களை வளம்படுத்திகொள்ளவே ஆர்வம் காட்டி வருகிறது.
விருதுநகர் மேலத்தெருவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கணபதி, மீனாட்சி, சுப்பிரமணிய சுவாமி, சுவாமி ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, காலபைரவர், நவகிரகங்கள், சந்திரன், சூரியன் என பரிவார தெய்வங்களும் உள்ளது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகப்படியாக இருக்கும். தினசரி பூஜைகளும் நடந்து வருகிறது. பழமை வாய்ந்த இக்கோயில் விருதுநகர் வாசிகளின் முக்கிய வழிபாட்டு தலமாகும். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் தான் போதிய அளவில் இல்லை.
கோயில் வளாகத்தில் உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நடந்தாலே கால்களை பதம் பார்க்கிறது. மழையின் போது வளாகமே சகதியாகிவிடுகிறது.பொதுமக்கள் எளிதில் நடந்து செல்லும் வகையில் வளாகத்தில் பேவர் பிளாக் அமைக்க அறநிலையத்துறை முன் வர வேண்டும். கோயில் வளாகத்தில் நுழையும் போதே ஆங்காங்கே குப்பை தென்படுகிறது.
பக்தர்கள் வந்து செல்லும் ஆலயத்தை துாய்மையுடன் வைத்திருப்பது அறநிலையத்துறையின் பணி தானே. காணிக்கை வசூலில் காட்டும் கவனத்தை சற்று கோயில் மேம்பாட்டிலும் காட்டுவது அவசியம்.இக்கோயிலுக்கு பல ஆண்டுகளாக தேர் இல்லாமல் இருந்தது. கடந்தாண்டு தான் பெரும் நிதியில் தேர்வு தயார் செய்யப்பட்டது. அந்த தேருக்கு ஷெட் கூட போடாமல் தார்பாய் வைத்து மூடி வைத்துள்ளனர். சுவாமியை வீதி உலா அழைத்து செல்லும் தேரை கூட அறநிலைய துறை பராமரிக்காதது பக்தர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
கோயில் பெயரில் சொத்துக்கள் ,கடை வாடகை என வருவாய் அதிகம் இருந்தும் பக்தர்கள், கோயில் மேம்பாட்டு வசதிக்கு எந்த பணியும் செய்யாது அறநிலையத்துறை அலட்சியம் காட்டுகிறது. இனியாவது வளர்ச்சி பணியில் அக்கறை காட்ட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வசதிகளை ஏற்படுத்தலாம் தனியார் கோயில்களில் கூட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. ஆனால் அரசே ஏற்று நடத்தும் கோயில் போதிய வசதிகளின்றி காணப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பேவர் பிளாக் ரோடு போடவும், தேருக்கான ஷெட் அமைப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
செல்வக்குமார், சிவபக்தர், விருதுநகர் புதுப்பொலிவுக்கு தேவை மேம்பாடு சொக்கநாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. விருதுநகரை ஆட்கொண்ட சிவபெருமானை நன்றாக பராமரிக்க வேண்டியது நமது கடமை அதற்கு அரசு நிர்வாகமும் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தினாலே கோயில் புதுப்பொலிவுறும்.