பதிவு செய்த நாள்
26
பிப்
2020
12:02
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்காக தயார் செய்யப்பட்ட, சிறப்பு மலர் புத்தகம் வெளியிடப்படாததால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம், 23 ஆண்டுகளுக்கு பின், 5ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் கோவிந்தராவ் சிறப்பு மலர் புத்தகம் வெளியிட, ஏற்பாடுகள் செய்தார்.இதற்கான பணிகள், சரஸ்வதி மஹால் நுாலகத்தில் நடந்தது. 250 பக்கங்கள் உடைய புத்தகத்திற்காக வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், கட்டுரையாளர், பேராசிரியர் என பலரிடம், 30 கட்டுரைகள் பெறப்பட்டன.ஆனால், கும்பாபிஷேகம் முடிந்து, மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், இதுவரை சிறப்பு மலர் வெளியிடப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது குறித்து, கட்டுரையாளர்கள் கூறியதாவது: பெரியகோவில் கும்பாபிஷேக மலர் வெளியிட, மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என, கூறப்படுகிறது. மேலும், புத்தகம் அச்சிடுவதில், போதிய நிதி இல்லாத நிலையில், பணிகள் நிற்பதாக கூறுகின்றனர்.சிறப்பு மலர் வெளியிட, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டலாபிஷேகம், 29ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அன்றை தினம், சிறப்பு மலர் புத்தகத்தை வெளியிட வேண்டுகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.