பதிவு செய்த நாள்
26
பிப்
2020
12:02
சேலம்: பால்குட ஊர்வலத்தில், திரளான பெண்கள் பங்கேற்றனர். சேலம், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 18 இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, சித்தி விநாயகர் கோவிலிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. திரளாக பெண்கள் பால்குடம் எடுத்துவந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, சக்தி அழைத்தல், பொங்கல், இரவில், பூங்கரகம், அக்னிகரகம், அலகு குத்துதலுடன், புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. பிப்., 27 இரவு சத்தாபரணம், பிப்., 29 மஞ்சள் நீராடுதல், மார்ச், 1ல் மறுபூஜை நடக்கவுள்ளது.
தங்க கவசத்தில்...: இடைப்பாடி, கல்வடங்கம், அங்காளம்மன் கோவிலில், மாசி திருவிழா, கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் தொடங்கியது. நான்கு நாள் நடக்கும் தேரோட்டத்தில் இரண்டாம் நாளான நேற்று, கோவிலை ஒட்டிய பகுதியில், சற்று தூரம் திரளான பக்தர்கள் இழுத்துச்சென்று நிறுத்தினர். இதையொட்டி, தங்க கவச அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* இடைப்பாடி, கவுண்டம்பட்டி, சின்ன மாரியம்மன் கோவில் மாசி திருவிழா, பூச்சாட்டுதலுடன், நேற்று தொடங்கியது. இதையொட்டி, சந்தனகாப்பு அலங்காரத்தில் சின்னமாரியம்மன் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஊரணி பொங்கல்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி முனியப்பன் கோவில் வளாகத்தில், பழமையான ஒற்றை முனியப்பன், ஊரின் காவல் தெய்வமாக உள்ளது. அங்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு மேல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.