பதிவு செய்த நாள்
01
மார்
2020
07:03
அரியலுார் மாவட்டம், அரியலுார் தாலுகா, கீழையூர் மேலப்பழுவூரில் இருக்கிறது, அகஸ்தீஸ்வரம் கோவில். இந்த சிவன் கோவில், அரியலுாரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில், 20வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. கிழப்பழுவூரில் உள்ள பிரபலமான பாடல் பெற்ற ஸ்தலமான, ஆலந்துரையார் கோவிலில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ளது; பஸ் வசதி உண்டு.
சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான காலங்களில், கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், சிற்றரசர்களாக இருந்து, இக்கிராமத்தை தலைநகராக்கி, அரியலுார் பகுதியை ஆண்டு வந்தனர்.அவணி கந்தர்வ ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்ட, கீழையூரில் முதலாம் ஆதித்ய மன்னனின், 13வது வயதில், கி.பி., 884ம் ஆண்டு, குமரன் கந்தன் பழுவேட்டரையரால், சிவன் கோவில் கட்டப்பட்டது. சோழர் கால கோவில்களில் ஒன்றான இந்த கோவில், மிகச் சிறந்த கல் கோவில்களில் ஒன்று. அழகான சிற்பங்களை வரிசையாக வைத்து, வெவ்வேறு கட்டடக்கலை முறையில் இருக்கிறது. கல்கியின் பொன்னி யின் செல்வனை வாசித்த எவருக்கும், வாழ்நாளில் மறக்கவே இயலாத பெயர் பழுவேட்டரையர்கள்.
நினைவு சின்னம்: இவர்களின் புகழுக்கு, சோழர்களின் கட்டடக்கலைக்கு நிகராக விளங்கும் வகையில் எழுப்பப்பட்ட கோவில்களே காட்சி; அதற்கு இந்த அகஸ்தீஸ்வரம் கோவிலே சாட்சி. பாகுபலியை நினைவு படுத்தும் வகையில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சிவனே சிவனை சுமப்பது போன்ற காட்சியும், அனகோண்டாவை நினைவு படுத்தும் விதத்தில், மிகப்பெரிய மிருகங்களை விழுங்கும் பாம்பும், மாசு மருவற்ற பழமையான சிற்பங்களும், பல்லியை வைத்து விளையாடும் பூதகணங்கள் என்று, கல்கோவிலை சுற்றி சுற்றி, பல கலையம்சங்கள் நிறைந்து உள்ளன.இந்த கோவிலின் சிறப்பு கருதி, தமிழக அரசின் தொல்பொருள் துறை, இதை நினைவு சின்னமாக பாதுகாத்து வருகிறது. இதுதான், இந்தக் கோவிலுக்கு கிடைத்த சாதகமாக, ஒரு பக்கம் கருதப்பட்டாலும், இன்னொரு பக்கம், இதுவே பாதகமாகவும் விளங்குகிறது. பாதுகாக்கப்பட்ட சின்னம் என்றாலே, அது உயிரோட்டமற்ற கட்டடம் என்றே பொதுமக்களும், பக்தர்களும் கருதி, அந்த வழியாக கடந்து சென்று விடுகிறார்களே தவிர, இது, உயிரோட்டமான, நாள் தவறாமல் பூஜை நடைபெறும் சிவன் கோவில் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.
சிறப்பு: இத்தனைக்கும், இந்தக் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் வருகிறது. ஆனால், வருமானம் இல்லாத கோவிலுக்கு, செலவழிக்க வழியில்லை போலும்; அவர்களும் செய்வதறியாது இருக்கின்றனர்.இவ்வளவிற்கும் நடுவில், இந்தக் கோவிலில் அர்ச்சகராக செயல்படும் குமாரசாமி குருக்களை பாராட்டியே ஆக வேண்டும். எதையுமே எதிர்பார்க்காமல், அகஸ்தீஸ்வரரையும் அபிதாகுஜாம்பிகை அம்பாளையும், தன் தாய், தந்தையாக போற்றி வருகிறார். சிவனின் திருமேனி தொட்டு, பூஜை செய்யும் பாக்கியம், எத்தனை பேருக்கு கிடைக்கும். அதற்கு முன் எதுவுமே பெரிதில்லை என்றே கருதுபவர். ஜோதிடம் பார்ப்பதன் வாயிலாக, வரும் வருமானத்தை வைத்து, கோவிலையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார். கோவில் வளாகத்தை சுற்றி, பூ மரங்களை நட்டு நந்தவனமாக்கி உள்ளார். கோவிலுக்கு வந்து, சிவனின் அருளால் வேண்டியது கிடைக்கப் பெற்றவர்கள், நன்றியோடு வரும்போது, கோவிலுக்கு செய்யுங்கள் என்று சொல்லி, கோவிலை மெருகேற்றுகிறார். அமைதியான இடத்தில் இருந்து, சிவன் அருளாட்சி செய்யும் பழமையான, பெருமையான இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். நீங்கள் நலம் பெறுவீர்கள்; கோவிலும் வளம் பெறும்.