ஆற்றுகால் பகவதி கோயில் விழா; 830 சிறுவர்கள் விரதம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2020 12:03
திருவனந்தபுரம் : ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவில் 9ம் தேதி நடைபெறுவதையொட்டி 830 சிறுவர்கள் விரதம் தொடங்கினர்.
மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கிய இடத்தில் கோயில் கட்டப்பட்டு, ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலாக உள்ளது. இங்கு மாசி பொங்கல் விழா முதல் தேதி தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி மார்ச் ஒன்பதாம் தேதி நடக்கிறது. இந்த விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வு குத்தியோட்டம். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துவர். விரதம் இருக்கும் இவர்கள் ஏழு நாட்கள் கோயிலில் தங்குவர். 1008 முறை அம்மனை விழுந்து வணங்குவர். 9ம் நாள் பொங்கல் படைக்கப்பட்ட பின் சன்னதிக்கு அழைத்து வரப்பட்டு, அலகு குத்தி அம்மன் ஊர்வலத்தில் அணிவகுத்து வருவர்.இந்த ஆண்டு இந்த வழிபாட்டில் 830 சிறுவர்கள் கலந்து கொள்கின்றனர். நேற்று இவர்கள் கோயிலில் விரதத்தை தொடங்கினர்.