பதிவு செய்த நாள்
04
மார்
2020
12:03
ஆந்திர மாநிலம், பெனுகொண்டா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நாளை, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
ஆரிய வைசிய சமூகத்தினர், வாசவியாக, தங்கள் குலத்தில் தோன்றி வாழ்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை, குலதெய்வமாக ஏற்று, ஆண்டுதோறும், அம்பிகையின் அவதார நாளையும், அக்னி பிரவேசத்தையும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. வாசவியாக கன்னிகா பரமேஸ்வரி தோன்றி வாழ்ந்த நிகழ்வுகள், கி.பி., 1015 முதல் 1022 வரை அரசாண்ட விமலாதித்தன் எனும் ஏழாம் விஷ்ணு வர்த்தனன் காலத்தில் நடந்துள்ளன. அப்போதே, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுகொண்டாவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு, விஷ்ணு வர்த்தனன் மகன் ராஜராஜ நரேந்திரனால் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான கோவிலில், ஸ்ரீ நகரேஸ்வரர், மகிசாசுரமர்த்தினி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஆயிரம் கால் மண்டபம் போல் அமைந்த துாண்களில், அம்மனுடன் ஐக்கியமான, 102 கோத்திரத்தார்களின் வரலாறு அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணி, மூன்று ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில், ஆரிய வைசிய சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. இதன் நிறைவாக, மஹா கும்பாபிஷேக விழா, நாளை காலை 7:30க்கு நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேக விழா என்பதால், பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.