பதிவு செய்த நாள்
09
மார்
2020
03:03
1912 ஏப்.15 இரவில், ‘டைட்டானிக்’ கப்பல் அட்லாண்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது பயணிகள் ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தனர். கப்பலின் தலைவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். சத்தம் கேட்டு விழித்த பிறகே ஆபத்தில் சிக்கியிருப்பதை பயணிகள் உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் 1528 பேர்.
எங்கும் அலறல்... உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை அறவே போய் விட்டது. அப்போது, கப்பலில் பயணித்த ஒரு குழுவினர், “ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்’ என்னும் பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பயணிகளும் அவர்களுடன் இணைந்து பாடினர். அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புனித ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா, அவரது மனைவியின் சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். கப்பலின் தலைவரைச் சந்தித்து. கெஞ்சிக் கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு ‘குட்பை’ சொல்லி அனுப்பினார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது.
அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால் அங்குமிங்கும் ஓடிய அவர், “இயேசுவை நம்புங்கள். காப்பாற்றப்படுவீர்கள்,” என்று சத்தமிட்டார்.
அதற்குள் கப்பல் முழுமையாக மூழ்கும் நிலைக்கு வந்தது. ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். பனிக்கடலில் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தன் ஜாக்கெட்டை கழற்றி வீசினார். “இதை அணிந்து கொள். தப்பி விடுவாய். என்னைப் பற்றி கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,” என்றார். அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கினார். தப்பிய பயணிகள் “ கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் செய்திருப்பார். ஆனால் ஆண்டவரோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை மரணத்தின் மூலம் தந்துள்ளார்’’ என்றனர்.