பதிவு செய்த நாள்
17
மார்
2020
04:03
கோத்தகிரி: ஊட்டி சிறியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. ஊட்டி அருகே அமைந்துள்ள சிறியூர் மாரியம்மன் திருவிழா, ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், நீலகிரி உட்பட, சமவெளிப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
நடப்பாண்டு, கடந்த 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 10ம் தேதி கம்பம் நாட்டு விழாவும், 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி அம்மனை அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. 16ம் தேதி பூ குண்டத்திற்கு பக்தர்கள் மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ மாசி கரியபண்ட ஐய்யன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து 6 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 12:00 மணிக்கு, ஜாகரை தேர் (நவதானிய பூஜை) நடைபெற்றது. தொடர்ந்து, கூக்கல் திருவள்ளுவர் கலா மன்றத்தாரின், ஆரவல்லி சூரவல்லி என்னும் படுக மொழி நாடகம் இடம்பெற்றது. நேற்றுக்காலை, 9:00 மணிக்கு, பூகுண்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோத்தகிரி ஊட்டி கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறியோருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, கூக்கல் எட்டூர் மக்கள் செய்திருந்தனர்.