உலகளந்த பெருமாள் கோவில் எழுந்தருளினார் தேகளீச பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2020 10:03
திருக்கோவிலுார்:மாசி மகத்திற்கு கடலுார் சென்ற உலகளந்த பெருமாள் 14 நாட்களுக்கு பிறகு ஆஸ்தானம் எழுந்தருளினார்.நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் தேகளீச பெருமாள் ஆண்டு தோறும் மாசி மகத்திற்கு கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். கடந்த 4ம் தேதி காலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் பாதம் தாங்கிகளில் புறப்பட்டார்.கடந்த 9ம் தேதி தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று, 180 கி.மீ., பயணித்து, 46 இடங்களில் விசேஷ மண்டகப்படி, திருவாராதனம், இரவு வீதி புறப்பாடு, கருட சேவை நடைபெற்று ஆஸ்தானம் புறப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு பெரியகோபுர வாயிலில் நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்க, பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே பெருமாள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலை சென்றடைந்தார்.நேற்று காலை 9:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள், மணவாளமாமுனிகள் ஒருசேர எழுந்தருள யாகசாலை பூஜைகள் துவங்கியது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.