சபரிமலை, பக்தர்களின் சரண கோஷ முழக்கம் இல்லாமல் சபரிமலையில் பங்குனி மாத பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட்டது. பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 13-ம் தேதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது.
கொரோனா பீதி காரணமாக பக்தர்கள் சபரிமலை வருவதை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்திருந்தது. நடை திறந்த நாளும், அதற்கு அடுத்த நாளும் பக்தர்கள் வந்தனர். அதன் பின் ஓரிருவர் மட்டுமே வந்தனர். நேற்று மிகவும் குறைவாக இருந்தது. இதனால் சரண கோஷம் எதிரொலிக்கும் சன்னிதானம் அமைதியாக காணப்பட்டது. படிபூஜை, களபாபிஷேகம், நெய் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை போன்றவை மட்டும் நடைபெற்றது. நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக மார்ச் 28 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 29 காலை 9:15 மணிக்கு கொடியேற்று நடக்கிறது. ஏப்ரல் 7 இரவு நடை அடைக்கப்படும். பக்தர்களுக்கு கட்டுப்பாடு தொடரும் என தெரிகிறது.