பதிவு செய்த நாள்
20
மார்
2020
12:03
மேட்டுப்பாளையம்: மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், நடவடிக்கை காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, சினிமா தியேட்டர்கள், மால்கள், கேளிக்கை பூங்கா மற்றும் விடுதிகள் ஆகியவற்றை மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்களில், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் பேரில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று முதல், வருகிற 31ம் தேதி முடிய, பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோயிலில் அம்மன் சுவாமிக்கு, 4 கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். பக்தர்கள் மட்டும் கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, கோவில் நிர்வாகம் அறிவிப்பை கேட்டில் ஒட்டியுள்ளது. இதேபோன்று, காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும், என கோவில் நிர்வாகம் கோவில் முன்பு அறிவிப்பு ஒட்டியுள்ளது.