பதிவு செய்த நாள்
20
மார்
2020
03:03
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சீரடி சாய்பாபா கோவில் நடை அடைக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம், குட்டையூர் மாதேஸ்வரன்மலை அருகே, சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும், சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதனால் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து, சாய்பாபா சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டு, கேட்டின் முன்பு பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஒத்துழைப்பு தரும் விதத்தில், சாய்பாபா கோவில் வளாகம், அரசிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. மேலும் அன்னதானமும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என, அந்த பிளக்ஸில் அச்சடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் நடை அடைக்கப்பட்டிருந்ததை பார்த்து திரும்பி சென்றனர். காரமடை பேரூராட்சி சார்பில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சிவன்புரம், சிவன்புரம்காலனி, வேளாங்கண்ணி நகர், குட்டையூர் உட்பட பகுதிகளில், புகை மருந்துகள் அளிக்கப்பட்டன.