திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடை வரும் 31 வரை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2020 12:03
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை நடை மூடப்படும் என்று கலெக்டர் அர்ஜுன்சர்மா கூறியுள்ளார்.
காரைக்கால் திருநள்ளாறு உலகப் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல்வேறு பகுதியில் ஏராளமான பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நலன் கருதி வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் 28 நாட்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கோவில் நிர்வாகம் தொற்று நோய் பாதிக்காத வகையில் நளன் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. பக்தர்களின் நலன்கருதி கோவில் நிர்வாகம் கோவிலை சுற்றி பக்தர்கள் செல்லும் நீண்ட வரிசைகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி புதுச்சேரி அரசு அறிவுறுத்தலின் பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா உத்தரவின் படி ஸ்ரீசனீஸ்வரபகவான் கோவில் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை நடை மூடப்படும். மேலும் சிறப்பு பூஜைகள் பரிகாரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் சுவாமிக்கு தினம் வழக்கப்படி பூஜைகள் நடைபெறும் எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மேலும் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கூறியுள்ளார்.கோவில் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று வெளியூரிலிருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.ஆனால் கோவில் நடை திடீரென்று அடைக்கப்பட்டதால். பக்தர்கள் ஏமாற்றத்துடன் கோவில் வாசலில் காத்திருந்தனர்.பின் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்களூக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. உடன் துணை மாவட்ட ஆட்சியரும் கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதாஷ் மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.