திருப்பூர்: திருப்பூரில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பகுதியிலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார பிரிவினர் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர்.திருப்பூரிலுள்ள அனைத்து பகுதிகளிலும், ரோடுகள், தெருக்கள், வீதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கோவில், சர்ச் மற்றும் மசூதிகள் அமைந்துள்ள வீதிகளில் நேற்று சுகாதார பிரிவினர் கிருமி நாசினி தெளித்தனர்.தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மும்முரமாக நடந்து வருவதால், துாய்மை பணியாளர்கள் அனைவரும் காலை முதல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மாநகராட்சியின் அம்மா உணவகம் மூலம் காலை மற்றும் பகல் நேர உணவு வழங்கப்படுகிறது.அருகே பணியாற்றும் ஊழியர்கள் நேரடியாக சென்று உணவருந்துகின்றனர். வேறு பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு பொட்டலம் தயார் செய்து ஊழியர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது.