திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே கோவில் கட்ட பள்ளம் தோண்டியபோது முக்கால் அடி உயரம் உள்ள காளி சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் அடுத்த மேமளூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பெரியாயி கோயில் கட்டுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜே.சி.பி., மூலம் பள்ளம் எடுத்துள்ளனர். 6 அடி ஆழத்தில், சுவாமி சிலை ஒன்று இருப்பதை பார்த்து அதனை எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தி வைத்தனர். சுவாமி சிலை கிடைத்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனை அறிந்த வி.ஏ.ஓ., ராஜலட்சுமி, மேற்கொண்ட விசாரணையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலையை அவரிடம் ஒப்படைத்தனர். வருவாய் ஆய்வாளர் பாண்டியன், மற்றும் வி.ஏ.ஓ., கைப்பற்றிய சிலையை நேற்று மாலை தாசில்தார் சிவசங்கரனிடம் ஒப்படைத்தனர். பத்து கைகளுடன் சிவபெருமான் மீது கால் வைத்திருப்பது போன்ற கோர தாண்டவத்துடன் கூடிய தட்சணகாளி சிலை என்பது தெரியவந்தது. இச்சிலை சமீபத்தில் வடிவமைக்கப் பட்டதாக இருக்கலாம் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். கோவில் கட்டுவதற்கு பள்ளம் தோண்டும் போது பெரியாயி மறு உருவமான காளியின் சிலை கிடைத்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.