பதிவு செய்த நாள்
10
ஏப்
2020
02:04
வாடிகன்: கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் வெளியேற முடியாத படி, கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படும் நிலையில், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான தேவாலயங்களும் வழிபாட்டுக் கூட்டங்களும் மூடப்பட்டுள்ளன.
கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிக்கனில், புனித வெள்ளிக்கான நிகழ்வுகளில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், இன்று நடக்கும் நிகழ்வுகளில் யாரும் பங்கேற்கக் கூடாது என, வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், போப் மட்டும் பங்கேற்று எல்லா ஆண்டும் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு நடத்துவார். அதை மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே காணலாம். அதற்காக, வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில், நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகெங்கும் உள்ள முக்கியமான தேவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகளையும் காணொலி மூலம் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.