கள்ளக்குறிச்சி: ஊரடங்கு உத்தரவு காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை நடைபபெறாமல் நேற்று மூடப்பட்டிருந்தன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று புனித வெள்ளி. புனித வெள்ளி தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். வாட்டிகனில் உள்ள தலைமை தேவாலயத்தில் துவங்கி உலகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் அன்றைய தினம் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புனிதவெள்ளி தினமான நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து தேவாலயங்களும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் ஏதுமின்றி மூடப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேவாலயங்களில் எவ்வித கூட்டுப்பிரார்த்தனையோ அல்லது சிறப்பு திருப்பலியோ நடத்தகூடாது என மறை மாவட்ட பேராயர் அறிவுறுத்தி இருந்தார். அதையொட்டி கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஆற்காடு லுாத்தரன் சபை பெதஸ்தா ஆலயம் உள்ளிட்டவை கதவுகள் மூடப்பட்டன.