பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
12:04
புதுடில்லி:மத விழாக்களை முன்னிட்டு, மக்கள் கூடுவதை அனுமதிக்க வேண்டாம் என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும், ஏப்ரலில் அதிக அளவில் மத விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், ஊரடங்கையொட்டி, நேற்று, கிறிஸ்துவர்கள், தேவாலயங்களுக்குச் செல்லாமல், வீட்டியே புனித வெள்ளி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அடுத்து, பைசாகி, ரங்கோலி பிஹூ, விஷூ, பொய்லா பொய்ஷாக் விழாக்கள் வர உள்ளன. வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அடுத்து, மஹா விஷூபா, சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளும் வர உள்ளன.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் நாட்களில், மத விழாக்கள் வர உள்ளன. இதையொட்டி, மக்கள் ஒன்று கூடுவதையும், பேரணியாக செல்வதையும் அனுமதிக்க கூடாது. ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதுவரையிலான ஊரடங்கு காலத்தில், விவசாய பணிகளுக்கும், அது தொடர்பான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் விற்பனைக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டப் பயிர், பெட்ரோல் பங்கு, தேயிலை தொழில், வாகன பழுது பார்ப்பு துறைகளுக்கும் விலக்கு தரப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் எந்தெந்த துறைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்பது பற்றி, மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்கள் பதில் அனுப்பியுள்ளன. அதில், கிராமப்புறங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அமித் ஷா ஆய்வு: மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, நேற்று எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில், குறிப்பாக வேலை இல்லாத பகுதிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாக, மத்திய உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.