மயிலாடுதுறை: கொரோனா வைரஸ் பீதியால் வைதீஸ்வரன் கோவில் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் முருகப்பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தரும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுவாமி வைத்தியராக எழுந்தருளி உள்ளார். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை 4448 வியாதிகளை குணமாக கூடியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி மற்றும் செவ்வாய் பகவானை வழிபட்டால் வியாதிகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாகவும் கொரோனா வைரஸ் பீதியாலுலம் உள்ளூர் வாசிகள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வெளியூர் பக்தர்கள் வருகை முழுமையாக தடை பட்டுள்ளது. இதனால் வைதீஸ்வரன் கோவில் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.