பதிவு செய்த நாள்
15
ஏப்
2020
01:04
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் கோவிலில், ஒன்பது வகை அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரூபாய் நோட்டுகளால் அலங்கார மாலை அணிவிக்கப்பட்டது.
முக்கனிகள் படைக்கப்பட்டன. இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கோவில்கள் நடைசாத்தப்பட்டது. இதனால், கோவில்களில் காலை மற்றும் மாலை நேர பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றாலும், பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. ராஜஅலங்காரத்தில் முருகன் வள்ளி, தெய்வாணையோடு அருள்பாலித்தார்.வால்பாறை எஸ்டேட் பகுதியிலுள்ள அனைத்து கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. ஊரடங்கு உத்தரவால் கோவில்களில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.உடுமலைஉடுமலையில், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் மற்றும் மங்கல பொருட்கள் உள்ளடக்கிய தட்டை, வீட்டு பூஜையறையில், வைத்து தமிழ் புத்தாண்டை வழிபட்டனர்.வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டியிருந்தனர். கிராம கோவில்களில், சித்திரையை வரவேற்க வேப்பிலை தோரணம் கட்டினர்.ஊரடங்கு காரணமாக, புனித தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து நடத்தப்படும், சிறப்பு வழிபாடு ரத்து செய்யப்பட்டது.
பஞ்சாங்கம் படிப்பு: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை மூலவருக்கும், உலகில் நோய் பாதிப்புகள் நீங்கி, சுபிட்ஷம் பெறவும், தன்வந்திரி பெருமாளுக்கும் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு பொருட்கள் கொண்டு யாகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் தாயார்களுக்கும், தன்வந்திரி பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.தமிழ்ப்புத்தாண்டுக்கு சுவாமிக்கு, முக்கனிகள் படைத்து, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சார்வரி வருஷ பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. கோவில் பட்டாச்சார்யார்கள் மட்டும், சிறப்பு யாக பூஜைகளில் பங்கேற்றனர். - நிருபர் குழு -.