4448 நோய்களை தீர்க்கும் வைத்தியராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலம் வைத்தீஸ்வரன் கோயில். இங்கு சித்தர்கள் யாவரும் ஒன்று கூடி சிவபெருமானுக்கு அமிர்தத்தால் அபிஷேகம் செய்தனர். அது சேர்ந்த இடத்தில் ஒரு குளம் உண்டானது. அதற்கு "சித்தாமிர்த குளம் என்று பெயர்.
இந்த தீர்த்தத்தில் சதானந்தர் என்ற சித்தர் தினமும் குளித்து சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இச்சிவபெருமானை ஜடாயு, ரிக்வேதம், முருகன், சூரியன் ஆகிய நால்வரும் வழிபடும் பேறு பெற்றனர்.தேவாரப்பாடல்களில் "புள்ளிருக்கு வேளூர் என இத்தலம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன், நோய்களைத் தீர்க்கும் பெருமானாக இருப்பதோடு நம் பிறவிப்பிணியையும் தீர்க்கும் வைத்தியநாதராக இருக்கிறார். இங்கிருக்கும் தையல்நாயகி அம்மன் கையில் தைலபாத்திரமும், அமிர்த சஞ்சீவி என்னும் மருந்தும் வைத்திருக்கிறாள். ஆண்டுமுழுவதும் அம்மனுக்கு மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது இத்தலத்தின் சிறப்பு. நவக்கிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு, அங்காரக பகவான் தனி சன்னதியில் காட்சிதருகிறார். ஆட்டுக்கிடா வாகனத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் அவர் பவனிவருகிறார். இங்குள்ள முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமி எனப்படுகிறார்.