பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, சக்திதேவியின் சிலையைக் கண்டனர். அந்த தேவியை பூஜிக்கபூக்களைத் தேடி அலைந்தனர். பூ கிடைக்காததால், ஒரு ஆலமரத்தின் இலைகளை பூக்களாக எண்ணித் தூவி தேவியை வணங்கினர். தேவியும் அவர்களுக்கு அருள்செய்தாள். பக்திக்கு தேவை இன்ன பொருள் என்பது முக்கியமல்ல.
நிஜமான பக்தியுடன் எந்தப் பொருளை காணிக்கையாக்கினாலும் அதை இறைவன் ஏற்பான் என்பதற்கு இது உதாரணம். பஞ்சபாண்டவர் வழிபாடு செய்த இந்த இடம் தற்போது "அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. சிவனின் அம்சமான சரபேஸ்வர மூர்த்தியின் இரண்டு இறக்கைகளில் இரண்டு சக்திகள் உள்ளனர். ஒரு சக்தி சூலினி துர்க்கை. மற்றொரு சக்தி பிரத்யங்கிரா. இவளை "அதர்வண பத்ரகாளி என்றும் அழைப்பர். எதிரிகளை ஒடுக்கி நம்மைக் காப்பவளாக விளங்கும் இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு. ராவணனின் பிள்ளையான மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவனான இந்திரனை வெல்லும் சக்தியை பிரத்யங்கிராதேவியே அளித்தாள். அய்யாவாடியில் அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பழங்கள், பூக்களுடன், மிளகாய் வத்தலையும் யாகத்தீயில் இடுவர். எவ்வளவு வத்தலை தீயிலிட்டாலும் நெடி தெரிவதில்லை.