பதிவு செய்த நாள்
26
ஏப்
2020
12:04
திண்டிவனம் : ஊரடங்கு உத்தரவு காரணமாக, அன்னதான திட்டத்தின் கீழ், கோவிலுக்கு வரும் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு வரும் 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக மெங்கும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில், பக்தர்கள், ஏழைகள் பயன்பெறும் வகையில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.ஊரடங்கு உத்தரவு காரணமாக, கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அன்னதான திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அன்னதான திட்டம் செயல்படும் கோவில்களில், சாம்பார், தயிர் என கலவை சாதங்களை பொட்டலமாக கட்டி வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதன் காரணமாக, திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், அன்னதான திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.