பக்த பிரகாலாதனுக்கு அருள்புரியவும், அசுர குலத்தை சேர்ந்த மாபெரும் சக்கரவர்த்தியான அவனது தந்தை இரண்ய கசிபுவிடமிருந்து இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காகவும் தூணிலிருந்து அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். இரண்யகசிபுவிற்கு பிறகு அவனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பிரகலாதனை மடியில் அமர்த்தி அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பகவான் நரசிம்மர். அப்போது பிரகலாதன் சொன்னான்,லட்சுமி நரசிம்மா! அரசர்கள் எதில் அமர்ந்து ஆட்சி செய்வார்களோ, அந்த இருக்கைக்கு பெயர் நிருபாசனம் (ராஜா ஆசனம்) ஆகும். நிருபன் என்றால் ராஜா. ஆனால் இன்றைக்கு முதல் முறையாக அதில் சிங்கமாகிய நீங்கள் ஏறி அமர்ந்துள்ளீர்கள். எனவே இனிமேல் எத்தனை அரசர்கள் தங்களது ஆசனங்களில் அமர்ந்து எங்கு ஆட்சி செய்தாலும், இனிமேல் அது உங்களது பெயரால் சிம்மாசனம் என்று அழைக்கப்படும், என்று கூறினான்.