பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
09:04
வேலுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசித்திருப்பீர்கள். அவரை பெரம்பலூர் அருகிலுள்ள செட்டிகுளத்தில் கரும்புடன் காணலாம். வைகாசி விசாகத்தை ஒட்டி இவரை வணங்கி மகிழ்வோம்.
தல வரலாறு: இவ்வழியே சென்ற ஒரு வணிகர் ஓய்வுக்காக அரச மரத்தில் ஏறி கிளை ஒன்றில் படுத்திருந்தார். களைப்பில் உறங்கி விட்ட அவர், ஏதோ சத்தம் கேட்டு விழித்த போது, நள்ளிரவாகி இருந்தது. ஓரிடத்தில் பேரொளியின் மத்தியில் இருந்த சிவலிங்கத்தை வானத்து தேவர்கள் போல் தோற்றமளித்த சிலர் பூஜித்ததைக் கண்டார். இதுபற்றி மன்னன் பராந்தகசோழனிடம் தகவல் தெரிவித்தார். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் அங்கு வந்தனர். அப்போது, கையில் கரும்புடன் வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம் சிவலிங்கத்தைக் காட்டினார். பிறகு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின் மீது முதியவர், கையில் வைத்திருந்த கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகரபாண்டியன் அந்த மலையில் முருகனுக்கும், லிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான்.
உச்சிக்குடுமி: 240 படிகளுடன் உள்ள மலைக்கோயில் இது. முருகனின் தலையில் குடுமி உள்ளது. உற்சவர் கையில் கரும்பு இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதைப்போல, பார்ப்பதற்கு கரடு முரடானவராக மனிதன் தோற்றமளித்தாலும், நற்குணம் கொண்ட நல்ல மனம் என்னும் இனிய சாற்றை கொண்டிருக்க வேண்டுமென்பதை கரும்பைக் கையில் வைத்திருப்பதன் மூலம் இவர் உணர்த்துகிறார்.
சிறப்பம்சம்: மலைக்கு நேரேயுள்ள ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. சித்திரை மாதப்பிறப்பன்று படிபூஜை நடக்கும். பொதிகை சென்ற அகத்தியர் இங்கே வரும் போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக அவருக்கு காட்சி தந்தார். இதனால் ஊர் "செட்டிகுளம் எனப்பட்டது. இவ்வூர் அருகில் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது.
கரும்புத்தொட்டில்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டியன்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத்தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்து, கோயிலை வலம் வருகின்றனர்.
இருப்பிடம்: திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் ரோட்டில் 44 கி.மீ., தூரத்திலுள்ள ஆலத்தூரில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ.,சென்றால் செட்டிகுளத்தை அடையலாம். சென்னையில் இருந்து வருபவர்கள் பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 15 கி.மீ.,கடந்தால் ஆலத்தூரை அடையலாம். ஆலத்தூரில் இருந்து பஸ் குறைவு. ஆட்டோ உண்டு.