கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கை; கோயிலில் கலெக்டர் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2020 04:05
சிவகங்கை: சிவகங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதால், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. இதனையடுத்து கோயிலுக்கு சென்ற அம்மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்து வந்த நிலையில், வேப்பனஹள்ளி அருகேயுள்ள நல்லூரை சேர்ந்த 67 முதியவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி, ஆரஞ்ச் மண்டலத்திற்கு மாறியுள்ளது. அதேநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 9 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கடந்த 21 நாட்களாக அந்த மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லாததால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 11 பேர் ஏற்கனவே குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மீதமிருந்த ஒருவரும் இன்று (மே 02) பூரண குணமடைந்ததால் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகள், இனிப்பு கொடுத்து வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜோதி வடிவில் ஜீவ சமாதி அடைந்த மகானும், கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்பட்டு வரும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை தினம் இன்று நடைபெறுகிறது. வருடந்தோறும் ஆராதனை விழாவிற்காக ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்று கூடி இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம், ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பரவலால் விழா நடைபெறவில்லை. இந்நிலையில் ஆராதனை விழாவைப் பற்றியும், சதாசிவ பிரம்மேந்திராளின் அற்புதங்களையும் கேள்விப்பட்ட கலெக்டர் ஜெயகாந்தன், அவரது ஜீவ சமாதி உள்ள மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் வேண்டி வழிபாடு செய்தார். அவருடன் சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் வந்தனர்.