இந்த மண்ணை விட்டு சென்ற பின் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது கேட்கப்படும் கேள்விகள் கடுமையாக இருக்கும். பலவீனம், அவமானத்தால் ஆட்டுக்குட்டி போல அப்போது நின்றிருப்பான். ‘‘ உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே...ஆனால் நீ உன் வாழ்வில் எப்படி செயல்பட்டாய்?’’ எனக் கேட்கப்படும். ‘‘இறைவா! பணத்தை பன்மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே உலகிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினால் அனைத்தையும் எடுத்து வருவேன்’’ என பதிலளிப்பான்.
‘‘மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பி வைத்தாய்? காட்டு பார்க்கலாம்’’ எனக் கேட்டால் பதிலளிக்க முடியாமல் விழிப்பான். மறுமையின் பங்கு ஏதும் இல்லாதவன் இறுதியில் நரகத்திற்குள் தள்ளப்படுவான். இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும். பூமியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பயன் கிடைக்காது. சிறிதளவு தர்மத்திற்கு கொடுத்தால் கூட மறுஉலகில் மகிழ்ச்சியாக வாழலாம். இறையச்சத்துடன் தர்மம் செய்பவர்கள் துணிச்சலுடன், ‘ இறைவா! எனக்கு கிடைத்த செல்வத்தில் இன்னின்ன தர்மங்களைச் செய்தேன்’ என பட்டியல் இடலாம். குறுகிய கால மனித வாழ்வில் தவறுகள் செய்து சுகம் காண்பதை விட்டு, மறுமைக்காக கொஞ்சம் தர்மம் செய்வது நல்லது.
இப்தார்: மாலை 6:41 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:32 மணி