பதிவு செய்த நாள்
11
மே
2012
11:05
பெரம்பலூர்: சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற புண்ணிய தலமான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்., 24ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவங்கியது. மே 1ம் தேதி இரவு காப்புகட்டுதலும், 2ம் தேதி சந்தி மறித்தல் விழாவும், 3ம் தேதி குடியழைத்தல் விழாவும் நடந்தது. பின்னர் தினமும் அன்னம், சிம்மம், ரிஷபம், யானை, வெள்ளி போன்ற வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை 10 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது, டி.ஆர்.ஓ., சுப்ரமணியன், அ.தி.மு.க., பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், யூனியன்குழு தலைவர் மருதைராஜ், நகராட்சி தலைவர் ரமேஷ், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், கோவில் உதவி கமிஷனர் தங்கமுத்து, செயல் அலுவலர் சூரியநாராயணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்ட விழாவை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து பெரம்பலூர், துறைமங்கலம், சிறுவாச்சூர், நொச்சியம், விளாமுத்தூர், காரை, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், புதுநடுவலூர், வெள்ளனூர், ஆலத்தூர்கேட், இரூர், பாடாலூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், கோனேரிபாளையம், எசனை, வேப்பந்தட்டை, தொண்டாப்பாடி, பாலையூர். அரசலூர், அன்னமங்கலம், செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, செங்குணம், வாலிகண்டபுரம், சிறுகுடல், அறுமடல், கவுல்பாளையம், நெடுவாசல், கல்பாடி, குரும்பாபாளையம், ஆதனூர், கொட்டரை, சித்தளி, பேரளி, க.எறையூர், எளம்பலூர், சோமண்டாபுதூர். அனுக்கூர், வடக்குமாதவி மற்றும் திருச்சி, சேலம், நாமக்கல், கடலூர், சென்னை, தஞ்சாவூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மன் அருள் பெற்றனர். தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மே 11ம் தேதி ஊஞ்சல் வழிபாடும், 12ம் தேதி விடையாற்றி நிகழ்வும், 14ம் தேதி சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தங்கமுத்து, செயல் அலுவலர் சூரியநாராயணன், கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.