பதிவு செய்த நாள்
11
மே
2012
10:05
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே ஆனை மலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சமணர் படுகைகள், பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடக்கிறது. ஆனை மலையில் சமண துறவிகள் வாழ்ந்த குகை மற்றும் கற்படுகைகளை இப்பகுதினர் "பஞ்சபாண்டவர் படுகை என்கின்றனர். இங்கு கி.பி., 9 - 10ம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பங்களான மகாவீரர், பர்வதநாதர், பாகுபலி, யக்சிஅம்பிகா சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் கீழ் தமிழ், கிரந்தம், வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன. தொல்லியல் துறை 2009ல், இந்த படுகைக்கு செல்ல பாதையும், பக்கவாட்டில் இரும்பு கம்பியையும் அமைத்தன. படுகை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் முட்கம்பிகளுடன், கேட் அமைக்கப்பட்டது. ஆனால் இவற்றை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இதை பார்க்க செல்வோர் பூட்டிய கேட்டை கடந்து, முட்கம்பிகளின் இடைவெளியில் சென்றுதான் பார்க்க முடியும்.இதையே சமூக விரோதிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்பத்திக் கொள்கின்றனர். மழை, வெயில் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதால், குடிமகன்களின் பொழுது போக்கு இடமாக உள்ளது. படுகை பகுதிகளிலும் பலர் தங்கள் பெயர்களை எழுதி, கல்வெட்டு எழுத்துகளை சேதமடையச் செய்துள்ளனர். மத்திய அரசால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியை சேதப்படுத்தி, தகாதமுறையில் பயன்படுத்தினால் தொல்லியல் துறை பாதுகாப்பு சட்டத்தின் படி மூன்று மாத சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். ஆனால் இதுவரையிலும் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமணர் படுகைகளை அச்சமின்றி பார்வையிடும் வகையில் படுகைக்கு செல்லும் வழியில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொல்லியல் துறையினர் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்.