காஞ்சி மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர், மதமாற்ற முயற்சிகள் பற்றி வருத்தப்பட்டதோடு அது பற்றிய கருத்தை மகாசுவாமிகளிடம் கேட்டார். ‘‘மற்ற மதங்கள் கடவுள் பற்றிச் சொல்வதோடு நின்று விடுகின்றன. இந்து மதம் மட்டுமே அவரவர் மனதிற்கேற்ப பிடித்தமான வடிவங்களில் வழிபடலாம் எனச் சுதந்திரம் கொடுத்துள்ளது. வழிபாட்டு முறை எதுவானாலும் பக்தி என்னும் பாவனை எல்லா மதத்திலும் ஒன்று தானே? இந்து மதம் மட்டுமே, ‘இது ஒன்றே மோட்ச மார்க்கம்; இது தவிர மோட்சத்திற்கு வேறு வழி கிடையாது’ என்று சொல்வதில்லை. நம் மதத்தில் மற்றவரை மாற்ற முயற்சிப்பது கிடையாது. ஏனெனில் கடவுள் ஒருவரே. அவரை அடைவதற்கான வழிகள் பல. அவையே மதங்கள் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கியதும் ஜட்காக்காரன், ரிக் ஷாக்காரன், டாக்சிக்காரன் என்று பலரும் வந்து சூழ்ந்து கொள்வர். யாருடைய வண்டியில் ஏறினாலும் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டியிடுவதைத் தவறு என்று சொல்ல முடியாது. அது அவர்களின் அன்றாடப் பிழைப்பு. ஆனால் கடவுள் என்னும் ஒரே லட்சியத்தை அடைய வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் மதத்திற்கு மாற்றம் செய்ய முயல்வது அர்த்தமற்றது. அவரவர் மதத்தைப் பின்பற்றி வாழ்வதே சரியான வழிமுறை. மதமாற்றம் செய்யும் போது, அவர்களின் மீது மற்ற மதத்தினருக்கு வெறுப்பு உண்டாகலாம். மற்றவரை நாம் வெறுப்பதோ, மற்றவர் வெறுக்கும் விதத்தில் நாம் நடப்பதோ கூடாது. . ஒரு மாடு, கண்ணாடியில் தன்னைப் பார்த்தால் வேறொரு மாடு இருப்பதாக கருதி அதை முட்டப் போகும். ஆனால் மனிதன் கண்ணாடியில் பார்க்கும் போது, இன்னொரு மனிதன் இருக்கிறான் என நினைப்பானா? இரண்டும் ஒன்றே என்று தெரிந்து அமைதியாக இருப்பான். இப்படியாக நாம் பார்க்கும் அனைத்தும் ஒன்றே, இரண்டாவது என்று எதுவும் கிடையாது. அப்படி இரண்டாவது இருப்பதாக எண்ணினால் அதை அடைய ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபத்தின் துாண்டுதலால் பாவங்களில் ஈடுபடுகிறோம். எல்லா மதங்களும் ஒரே இடத்தை அடைவதற்கான வெவ்வேறு வழிகள் என்னும் உண்மை புரிந்தால் மதம் மாற்றவோ, மாறவோ எண்ணம் தோன்றாது’’ என்றார்.