ஒருமுறை வியாபாரி ஒருவர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்தார். மகாசுவாமிகளை வணங்கி, ஒரு மூடை அரிசிக் குருணை, வெல்லத்தை தானமாகக் கொடுத்து விட்டுப் போனார். அதை ஒரு ஓரமாக வைக்கச் சொன்ன சுவாமிகள், யாரையோ எதிர்பார்ப்பது போலக் காத்திருந்தார். மடத்திற்கு நாள்தோறும் ஒரு மூதாட்டி வருவாள். ஏழையான அவளுக்கு சுவாமிகள் தான் நடமாடும் தெய்வம். அவர் சொல்வது தான் வேதவாக்கு. மடத்தில் சின்னச் சின்னப் பணிகளைச் செய்வாள். அவள் அன்று சற்று தாமதமாக வந்தாள். அவளைக் கண்ட சுவாமிகளின் முகம் மலர்ந்தது. ‘உனக்கு ஒரு வேலை தரப் போகிறேன், இன்னிக்கே செய்வாயா?’’ எனக் கேட்டார். மூதாட்டி மகிழ்ச்சியுடன், ‘கட்டாயம் செய்கிறேன் சுவாமி!’ என்றாள். ‘‘இதோ... இந்த மூடையிலிருந்து கைப்பிடி அரிசி, கொஞ்சம் வெல்லம் எடுத்துக்கோ. தினமும் எறும்புப் புற்றில் கொஞ்சம் இடு. ஒரு நாளைக்கு ஒரு தெருவாகப் போய் இந்த வேலையைச் செய்’’ என்றார். சுவாமிகள் கட்டளையை எண்ணி பரவசம் கொண்டாள். தினமும் காலையில் குளித்து விட்டு சீக்கிரமாக மடத்திற்கு வரத் தொடங்கினாள். அரிசிக் குருணை, வெல்லத்தை கலந்து எடுத்துக் கொண்டு வீதிவீதியாகச் சென்று எறும்புப் புற்றில் துாவுவாள். ஓரிரு மாதமாக இந்த வேலை தொடர்ந்தது. இந்த சமயத்தில் ஒருநாள் மகாசுவாமிகளைச் சந்திக்க வந்தார் ஒரு செல்வந்தர். விரல்களில் மோதிரங்கள், கழுத்தில் தங்கச் சங்கிலி என்று பகட்டாக இருந்தார். சுவாமிகளை வணங்கிய அவர், நுாற்றுக்கணக்கான பேருக்கு தான் அன்னதானம் செய்வதாகத் தெரிவித்தார். அன்னதானத்தால் தனக்கு ஊருக்குள் தனிமதிப்பு என்றும் புகழ்ந்து கொண்டார். அவரின் தற்பெருமை பேச்சை விரும்பாத சுவாமிகள், கைதட்டி அங்கிருந்த மூதாட்டியை அழைத்தார். ‘‘இந்த வயதான காலத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு அன்னமிடுகிறாள் இந்தப் பாட்டி. ஒரு பிடி அரிசிக்குருணை, வெல்லத்தைக் கொண்டு போய் எறும்புப் புற்றில் தினமும் துாவி வருகிறாள். தற்பெருமையாக ஒரு வார்த்தை கூட சொல்லியதில்லை. நாம் நல்லது செய்யணும். அது மற்றவருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மனச்சாட்சிக்கு மதிப்பு கொடுத்தால் போதும்!’’ சுவாமிகளின் பேச்சு செல்வந்தருக்குச் சுருக்கென்று இருந்தது. ‘எப்படி வாழ வேண்டும் என்பதை இவளைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்!` என அறிவுறுத்தினார் சுவாமிகள். மூதாட்டிக்கு கண்ணீர் மல்கியது.