500 ஆண்டு முந்தைய ஆதிசிவன் கோயில்: கருநாகம் வந்ததால் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2020 10:06
காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தலில் ஆதிசிவன் கோயில் இருந்தது தற்போதைய தலைமையினருக்கு தெரியாது. இங்கு கருநாகம் நடமாட்டம் இருந்துள்ள நிலையில் இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் இதன் நடமாட்டத்தை கண்டு கிராமத்தினர் அஞ்சினர். சிலர் கண்ணில் தென்பட்டு அங்குள்ள புற்றுக்குள் சென்று மறைந்து விடும். இக்கிராமத்தினர் சித்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதில் அப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முன் பயன் படுத்தப்பட்ட மயானத்தில் சிவன், முனீஸ்வரராக உலா வருவதாகவும் அங்கு நாகர் சிலை பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும். பவுர்ணமி அன்று புற்றுக்கு பூஜை செய்தால் ஊருக்கும் மக்களுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். இங்கு வந்து வழிபட்ட பலருக்கு தீராத நோய் தீர்ந்து குழந்தை பாக்கியம் மன அமைதி கிடைத்து நாகதோஷம் நீங்கியதாக தெரிவித்தனர். பவுர்ணமி அன்று சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பாண்டியர் காலத்து கல்வெட்டு: 15 ஆண்டுகளுக்கு முன் பார்த்த போது முட்புதருக்குள் சிறிய அளவிலான புற்று தென்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கருநாகம் நடமாட்டம் இருப்பது பலரது கண்களில் தென்பட்டதையடுத்து சித்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட போதுதான் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. இது பாண்டியர் காலத்தில் பிராமணர்கள் வசித்த பூதராஜபுரம் என்றும் குண்டாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக இங்கிருந்த சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் அழிந்ததாக தெரிவித்தனர். அதற்கு சான்றாக சமீபத்தில் பாண்டிய மன்னர் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இங்கிருக்கும் புற்றுக் கோயிலில் சிவன், முனீஸ்வரர் நாகம் வடிவில் இருந்து வருகிறார். நாகம்மாள் பத்திரகாளியாக வலம் வந்து காத்து வருகிறார். வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைப்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கணேச பாண்டியன், பூசாரி, கணக்கனேந்தல்