பதிவு செய்த நாள்
28
ஜூன்
2020
02:06
தேனி: தேனி அருகேயுள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. கொரோனா ஊரடங்கலில் 90 நாட்களுக்கும் மேலாக அம்மன் வீற்றிருக்கும் கருவறை நடை அதிகாலை 5:00 மணிக்கு முறைதாரர்களால் திறக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு காலபூஜையும், பின் மாலை 7:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. பின்னர் நடை அடைக்கப்படுகிறது. கொரோனா காரணமாக பூஜாரிகள் தவிர பக்தர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. ஆண்டு தோறும் சித்திரையில் கொடியேற்றி விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவை காண முடியாமலும், அம்மனையும் தரிசிக்க வழியின்றி பக்தர்கள், ஆயிரம் கண்ணுடைய கவுமாரி தாயே... உன்னை நாங்கள் என்றுதரிசிப்போம், என தவிக்கின்றனர். இந்நிலையில் தினமும் அதிகாலை கோயிலுக்கு வெளியே சமூக இடைவெளியுடன் கோயில் கோபுரத்தை தரிசித்து செல்கின்றனர். அம்மனை நீண்ட நாட்கள் தரிசிக்காத பக்தர்களின் மனநிலை என்னவாக இருக்கும்... அவர்களே மனம் திறக்கிறார்கள்.
வேண்டினோம்: கடந்த 3 தினங்களுக்கு முன்தான் திருமணம் முடிந்தது.கொரோனா ஆண்டில் இல்லற பந்தத்தில் இணைந்தது மறக்க முடியாத அனுபவம். வீரபாண்டி கவுமாரி கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். நாங்கள் இருவரும் தம்பதியாக அம்மனை காண முடியாதது வருத்தம்தான். இருந்தாலும் கோபுர தரிசனம் செய்தோம். கொரோனாவில் இருந்து அனைவரும் விரைவில் மீள வேண்டினோம். வீரபாண்டி கோயில் முன் வணங்கிய புதுமணத்தம்பதி சுரேஷ், 27 - சாதனா, 23
கோபுர தரிசனம்: உப்பார்பட்டியில் ஓட்டல் வைத்துள்ளேன். தினமும் அதிகாலையில் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வேன். ஒரு நாள்கூட இங்கு வராமல் இருந்தது இல்லை.
கடந்த 90 நாட்களுக்கும் மேலாக கொரோனா என்ற கொடிய வைரஸ் விஷக்கிருமியால் அம்மனை தரிசிக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது நினைத்தால் கவலை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி அம்மனை விரைவில் தரிசிப்போம். முன்னர் போல் வாழ்வாதாரம் செழிக்க வேண்டும். சுற்றத்தார் அனைவரும் நலமாக வளமாக வாழ அம்மன் அருள் புரிய வேண்டும்
என தினமும் கோபுர தரிசனம் பெற்று வேண்டிவருகிறேன். - கே.பரமசிவம், 53, உப்பார்பட்டி
இந்நிலை மாறும்: ஆண்டில் பலமுறை அம்மனை தரிசிக்க குடும்பத்துடன் இங்கு வருவோம். வழக்கமாக சித்திரைதிருவிழாவிற்கு வந்து முல்லைப் பெரியாற்றில் குளித்து பக்தர்களோடு பக்தர்களாக அம்மனைதரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆனந்தமாக இருக்கும். மனதுக்கு ஆறுதல் தரும். ஆனால் அது இம்முறை ஆட்கொல்லி கிருமியான கொரோனாவால் முடியாமல் போனது வார்த்தைகளால் கூற இயலாத வருத்தமாக உள்ளது. விரைவில் இந்தநிலை மாறி அம்மன் அருள்புரிவாள். நாடு வளம் பெற்று, மக்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும். -எம்.முத்துலட்சுமி 21, கம்பம்
மன நிம்மதி: எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் கவுமாரியை தரிசனம் செய்து வருகிறேன். கருவறையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றதும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மனவருத்தம் ஏற்பட்டது. பெரியவர்கள் ஆலோசனையின்படி தினமும் கோயிலுக்கு வெளியே வணங்கி கோபுரம் தரிசனம் செய்த பின்தான் மனம் நிம்மதி கொள்கிறது. வீரபாண்டி சித்திரை தேரோட்டம், திருவிழா, பக்தர்கள், முல்லைப் பெரியாறு, கன்னீஸ்வர முடையார் கோயில் என அலைமோதும் கூட்டமாக காணப்படும். கொரோனா பரவலால் இம்முறை அதை காணமுடியவில்லை. அம்மன் அருளால் அனைவரும் நலம் பெற வேண்டும் என வேண்டுகிறேன். -ஜி.கலாவதி, 38, வயல்பட்டி
காத்திருக்கிறோம்: கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து என அறிவித்ததால் வேதனை அடைந்தேன். மனதில் இனம்புரியாத துன்பம் தொற்றிக்கொண்டது. கடந்த 90 நாட்களாக கோபுர தரிசனம் செய்கிறேன். அதனால் கோடி புண்ணியம் எனக்கூறுவதால் மனம் ஆறுதல் அடைகிறது. கொடியேற்றம் நடந்து சித்திரை திருவிழா துவங்கி 22 நாள் வீரபாண்டி விழாக்கோலமாக இருக்கும். அது நடக்காமல் இந்தாண்டு முட்டுக்கட்டை போட்ட கொரோனாவை உலகத்தை விட்டே ஒழிக்க அன்னை அருள்புரிவாள். அந்த நாளுக்காகவும், அன்னையின் தரிசனத்திற்காகவும் காத்திருக்கிறோம். -ஆர்.காமுத்துரை, 51, வீரபாண்டி