புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட டில்லியில் ஜூம்மா மசூதி, வரும் 4ம் தேதி திறக்கப்படும் என இம்மசூதியின் ஷாகி இமாம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்பில் சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததை அடுத்து சில வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. டில்லியில் உள்ள ஜூம்மா மசூதியும் கடந்த ஜூன் 8ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் 11ம் தேதியே மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஜூலை 4ம் தேதி மீண்டும் மசூதி திறக்கப்படும் என ஷாகி இமாம் தெரிவித்துள்ளார். இம்மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி கூறியதாவது: வல்லுநர்களுடனும் பொதுமக்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும், வைரஸ் மீதான அச்சம் குறைய தொடங்கியதாலும், மக்கள் தொழுகை நடத்த வசதியாக, மசூதியை மீண்டும் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மசூதியில் பின்பற்றி, வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.