பதிவு செய்த நாள்
14
மே
2012
03:05
பக்தர்களுக்கு அருள் செய்வதில் ஸ்ரீமன்நாராயணனுக்கு நிகர் யாருமில்லை. கூபதாசரின் வரலாறு கேட்டால் பக்தர்களுக்கு இது புரியும். சீதடி என்னும் ஊரில் வசித்தவர் கூபதாசர். குலத்தால் குயவர். மட்பாண்டம் செய்து விற்றுக் கிடைக்கும் பணத்தில் பரந்தாமனின் அடியார்களுக்கு உணவளித்து, மீதியில் தன் பத்தினியோடு காலம் கழித்தார். ஒருமுறை அவ்வூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அடியார்கள் வந்தனர். அவர்கள் கூபதாசரின் கொடைத்திறன் அவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் கூபதாசரின் இல்லம் தேடி வந்து, உணவளிக்கும்படி கேட்டனர். இத்தனை பேரை பார்த்ததும், கூபதாசர் மகிழ்ந்தாலும், ஒரே நேரத்தில் நூறு பேருக்கு உணவளிக்கும் அளவுக்கு அவர் செல்வரல்ல. பரந்தாமனை நினைத்தபடியே, ஒரு கடைக்குச் சென்றார். தன் நிலைமையைச் சொன்னார்.
ஐயா! ஒரே நேரத்தில் நூறு அடியார்கள் என் இல்லம் தேடி வந்துவிட்டனர். அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளேன். நீங்கள் எனக்கு மளிகைப் பொருட்களை தாருங்கள். நான் கொஞ்சம் கொஞ்சமாக பணம் தந்து விடுகிறேன், என்றார். கடைக்காரர் மறுத்துவிட்டார். பணம் தந்தால் தான் பொருள் தரப்படும் என உறுதியாகச் சொல்லிவிட்டார். கூபதாசர் கெஞ்சினார். அங்கேயே ஏதேனும் வேலை தந்தாலும் செய்வதாக கூறினார். சம்மதித்த கடைக்காரர், தன் வீட்டுக்கு வந்து கிணறு வெட்ட வேண்டும் என்றார். கூபதாசரும் சம்மதித்தார். பின்பு, பொருட்களுடன் வீட்டுக்கு சென்று, அடியவர்கள் வயிராற உணவளித்தார். அவர்கள் வாழ்த்திவிட்டு சென்றனர். மறுநாளே கிணறு வெட்ட மனைவியுடன் சென்றார் கூபதாசர். வெட்டிய மணலை மேலே குவித்துக் கொண்டிருந்தார் அவரது மனைவி. திடீரென மணல் சரிந்து கிணறை மூடியது. கூபதாசர் உள்ளே சிக்கிக் கொள்ள யாராலும் அருகே செல்ல முடியவில்லை. இரண்டு, மூன்று நாட்களாகியும் அவரை மீட்க முடியாமல் போகவே, கூபதாசர் இறந்திருப்பார் எனக்கருதி அனைவரும் சென்று விட்டனர். அவர் மனைவி அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை.
பரந்தாமா! உன் அடியவர்களுக்கு செய்த கைங்கர்யத்திற்கு நீ தந்த பலன் இதுதானா,என மனம் வருந்தினார். சில ஆண்டுகள் கழிந்து விட்டன. கூபதாசரைப் பற்றிய நினைவு பலருக்கும் மறந்து விட்டது. ஒருநாள், ஏராளமான அடியவர்கள் அக்கிணறு இருக்கும் வழியே கடந்தனர். கிணற்றுக்குள் இருந்து தாளச்சத்தமும், ஹரிநாம சங்கீர்த்தனமும் கேட்டது. அவர்கள் மன்னனுக்கு தகவல் தெரிவித்தனர். பெரும் கூட்டம் கூடியது. மன்னன் மணல் மூடிக்கிடந்த கிணறை தோண்ட உத்தரவிட்டான். மணல் அள்ளப்பட்டது. உள்ளே கூபதாசர் தாளம்கொட்டி, ஹரிநாராயணனின் புகழ் பாடிக் கொண்டிருந்தார். அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மன்னன் கூபதாசரை அழைத்து கவுரவித்தான். பெரிய தர்மசாலை ஒன்றை நிறுவி, அதன் தலைவராக்கி பொருளை வாரிக் கொடுத்தான். பரந்தாமனின் அடியவர்க்கெல்லாம் மனைவியின் உதவியுடன் உணவளித்து மகிழ்ந்தார் கூபதாசர். கூபதாசரை கவுரவித்ததன் மூலம் பகவான் பக்ததாசன் ஆனான்.