பதிவு செய்த நாள்
14
மே
2012
03:05
அன்னியக்குச்சம் என்ற ஊரில் வசித்தவன் அஜாமிளன் என்ற அந்தணன். அவனுக்கு அழகான மனைவி இருந்தாள். ஆனாலும், அவன் விதியின் பிடியில் சிக்கி தாசிகளின் இல்லத்திற்கு சென்றான். இத்தனைக்கும் அவன் மனைவியும் அவனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். எவ்வளவோ முயன் றும், அஜாமிளனின் மனைவியால் அவனைத் திருத்தவே முடியவில்லை. அவனது கடைசி காலகட்டமும் வந்து விட்டது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த அவன் சாகும் தருணத் தில், தன் மூத்த மகன் நாராயணனை அழைத் தான். நாராயணா, நாராயணா, என அழைக்கவும், அவன் உயிர் பிரிவதற்கும் சரியாக இருந்தது. எமதூதர்கள் வந்தனர். அவனைக் கட்டியிழுத்து எமதர்மனிடம் கொண்டு சென்று, அவன் செய்த பாவத் திற்கு தண்டனை வாங்கிக் கொடுக்க எண்ணினர்.
இதற்குள் வைகுண்டத்தில் இருந்து தேவலோக விமானம் வந்தது. அவர்கள் எமதூதர்களிடம் வாதிட்டனர். எமதூதர்களே! நீங்கள் அஜாமிளனை விட்டு விடுங்கள். அவன் சாகும் நேரத்தில் நாராயணனின் நாமத் தைச் சொன்னான். எனவே அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறோம், என்றனர். அதற்கு தூதர்கள், ஐயன்மீர்! தாங்கள் செய்வது முறையாகுமா? அவன் பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணனையா அழைத்தான். தன் மகன் நாராயணனை அல்லவா அழைத்தான்! அது மட்டுமல்ல. அவன் தாசிகளோடு கூடிக்களித்து குடும்பச் சொத்தை அழித்தான். மனைவி, குழந்தைகளின் மனதைப் புண்படுத்தினான். இந்தக் கொடியவனை வைகுண்டம் கொண்டு செல்வதில் அர்த்தமே இல்லை, என்றனர். விஷ்ணு தூதர்களோ இதற்கு சம்மதிக்கவில்லை.
நாராயணா என ஒருமுறை சொன்னால் போதும். அவன் அதுவரையில் செய்த பாவங்கள் தொலைந்து விடுகின்றன. இது விஷ்ணுவின் உத்தரவு. நாங்கள் அவனை வைகுண்டம் கொண்டு செல்கிறோம், என்று கூறி விமானத்தில் ஏற்றிச் சென்று விட்டனர். விஷ்ணு தூதர்களை எதிர்க்க முடியாத காலதூதர்கள், பயந்தபடியே எமனிடம் சென்றனர். அடேய், மடையர்களே, அஜாமிளனை ஏனடா விட்டு வந்தீர் கள்? என்று எமன் கேட்பான் என நினைத்தனர். எமதர்மராஜனோ அவர்களிடம், தூதர்களே கலங்க வேண்டாம். விஷ்ணு தூதர்கள் சொன்ன அனைத்தும் உண்மையே. சாகும் நேரத்தில் நாராயண நாமம் சொல்பவர்களை நான் தண்டிப்பதில்லை. அஜாமிளன் தவறு செய்தது கூட சூழ்நிலையின் காரணமாகத்தான். அவன் ஒரு காலத்தில் அந்தணருக்குரிய அனைத்து கர்மநெறிகளையும் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தான்.
ஒருமுறை காட்டு வழியே நடந்து வரும் போது காமுகன் ஒருவன், ஒரு தாசியுடன் இணைந்திருந்ததைப் பார்த்து விட்டான். அதன் பின் அவனும் கெட்டுப் போனான். தாசிகளோடு உள்ள பழக்கத்தை அவனால் தவிர்க்க இயலவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் எப்படியோ நாராயண நாமம் சொல்லி விட்டான். நான் நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் தான். அவரே சர்வலோக வியாபி. அனைவரையும் காக்கும் பொறுப்பு அவருடையது. நாராயண நாமமே உலகில் உயர்ந்தது. அந்த நாமத்தை உச்சரிக்கும் ஒருவன் மாசு மருவற்ற பரிசுத்தனாகி விடுகிறான். விஷ்ணுவை ஆராதிப்பவர்களுக்கு துன்பம் என்பது எள்ளளவும் இல்லை. நீங்களும் இனி நாராயண நாமம் சொல்லுங்கள், என்றான். எமலோகத்தை நாராயண நாம கோஷம் வியாபித்தது.