பதிவு செய்த நாள்
14
மே
2012
03:05
மங்களபட் என்ற சிற்றூரில் நீலாவதி என்ற கணிகை வாழ்ந்து வந்தாள். இவள் இசையிலும், நாட்டியத்திலும் தேர்ந்தவள். இவளது மகள் கானோபாத்திரை. சேற்றில் பிறந்த செந்தாமரை, குப்பையிலே குருக்கத்தி என்பது போல் கணிகை குலத்திலே தோன்றியவள் கானோபாத்திரை. பார்த்தவர் வியக்கும் வண்ணம் இருந்தாள். இவளின் இறையன்பும், இசையும், நர்த்தனமும் மக்கள் மனதைக் கவர்ந்தது. ஆனால், இவள் தன்னை இறைவனுக்கென்றே அர்ப்பணம் செய்தவள். இவளது மனம் எப்போதும் பாண்டுரங்கனின் திருவடிகளிலேயே லயித்திருந்தது. இதை அறிந்திருந்தும் தாய் நீலாவதி தன் மகளின் மகளின் ஆடல், பாடலை அரசன் முன் அரங்கேற்ற விரும்பினாள். அம்மா! நீ என்னை மன்னனுக்கு அர்ப்பணித்து பொன்னும், பொருளும், புகழும் பெற விரும்புகிறாய். இவைதான் வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணுகிறாயா? சிறிது சிந்தித்துப்பார். அழியக்கூடிய இந்த உடலும், அதனால் கிடைக்கக்கூடிய பொன்னும் பொருளும் பெரிதா? இல்லை..இறைவனின் அருள் பெரிதா? என் மனம் அந்த பண்டரிநாதனையே மணாளனாக ஏற்றுக்கொண்டு விட்டது. என்னை இழிதொழில் செய்ய வற்புறுத்தாதே. உன்னிடம் இறைஞ்சி கேட்டுக்கொள்கிறேன், என்றாள். நீலாவதியும் சிறிது விட்டுப்பிடிக்க எண்ணினாள். இச்சமயம் பண்டரிபுரம் யாத்திரைக்குழு ஒன்று அவ்வூருக்கு வந்தது. கானோபாத்திரை, அக்குழுவுடன் தானும் பண்டரிபுரம் செல்ல தாயிடம் அனுமதி பெற்று அவர்களுடன் பண்டரிபுரம் சென்றாள்.
பாண்டுரங்கன் கோயிலையே அடைக்கலமாகக்கொண்டு பாடல்கள் பாடியும், பஜனை செய்தும், கோயில் பிரசாதத்தை உண்டும் காலம் கழித்தாள். கானோபாத்திரையின் இசை, அழகு, நாட்டியம் இவை பற்றியே ஊரெங்கும் பேச்சாக இருந்தது. ஒருநாள் கோயிலுக்கு வந்த மன்னன் இவளது அழகில் மயங்கினான். அரண்மனைக்கு வந்த மன்னன் சேடிப்பெண்களிடம் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களுடன் பல்லக்கை அனுப்பி அவளை அழைத்துவரும்படி கூறினான். கானோபாத்திரை அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டாள். மன்னனும் விடாமல் அவளை அரண்மனைக்கு அழைத்துவரும்படி கூறினான். அவளோ, கோயிலைவிட்டு எங்கும் வரமுடியாது என கூறிவிட்டாள். மன்னனுக்கு கோபம் ஏற்பட்டது. கானோபாத்திரையை எப்படியாவது தன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும்படி வீரர்களுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் வற்புறுத்தியும், பயமுறுத்தியும் அழைத்தனர். அவர்களிடம் கானோபாத்திரை, ஐயா! சிறிதுநேரம் இங்கேயே நில்லுங்கள்! நான் கடைசி முறையாக இறைவனை கண்டு அவரிடம் விடைபெற்று வருகிறேன். பின் உங்கள் விருப்பம்போல் மன்னனிடம் செல்வோம், என்றாள். கோயிலுக்குள் சென்று, ஹே! பாண்டுரங்கா! பரமதயாளா! நான் தங்களையே மணாளனாக ஏற்றுக்கொண்டது தங்களுக்கு தெரியாதா? தங்களுக்கே உரிய இவ்வுடலை மற்றவர் தீண்டுதல் முறையா? அடியவளைக் காத்து ரட்சிக்கக்கூடாதா? என பலவாறு புலம்பினாள். அங்குள்ள அர்ச்சகர்களும் மற்றவர்களும் இதைக்கண்டு மனம் கலங்கினர். அச்சமயம் திடீரென ஒரு மின்னல் ஒளி தோன்றியது. கானோபாத்திரை வேரற்ற மரம்போல் மண்ணில் சாய்ந்தாள்.
அவளிடம் இருந்துஒரு ஜோதி புறப்பட்டு பாண்டுரங்கனின் விக்ரகத்திற்குள் செல்வதை எல்லோரும் கண்டனர். அர்ச்சகர்கள், ஐயோ! இப்பெண்ணிற்காக கோயில் வாயலில் அரசனின் வரர்கள் காத்திருக்கின்றனர். உயிரற்ற இப்பெண்ணின் உடலைக்கண்டால் வீரர்கள் நம்மை அரச தண்டனைக்கு ஆளாக்குவார்களே, என்று எண்ணி அஞ்சி நடுங்கினார். பிறகு தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு யாரும் அறியாதபடி கோயிலின் தெற்கு பிரகாரத்தில் ஒரு குழி தோண்டி அதில் கானோபாத்திரையின் உடலைப் புதைத்தனர். இறைவனை எண்ணி கண்மூடி இருகரம் கூப்பி வணங்கினர். கண்ணைத் திறந்து பார்த்தபோது, புதைத்த இடத்தில் ஒரு விருட்சம் (மரம்) இலைகளும், பூக்களுமாய் நிறைந்து நின்றது. அர்ச்சகர்கள் வியந்து வணங்கினர். கோயில் வாசலில் நின்றிருந்த வீரர்கள் சூரியன் மறையும் வரை அவள் வருவாள் வருவாள் என்று காத்திருந்து, கோயிலுக்குள் சென்றனர். கானோபாத்திரை எங்கே? என்று கேட்க, அர்ச்சகர்கள் நடந்ததைக் கூறினர். அவர்களைத் தெற்கு பிரகாரத்திற்கு அழைத்துச்சென்று புதிதாகத் தோன்றிய விருட்சத்தைக் காட்டினர். அதை நம்ப மறுத்த வீரர்கள் அர்ச்சகர்களின் கையில் விலங்கிட்டு மன்னரிடம் இழுத்துச்சென்றனர். நடந்தவற்றை வீரர்கள் மன்னனிடம் கூறினர். அர்ச்சகர்கள் மன்னனுக்கு மடியில் இருந்து பிரசாதத்தை எடுத்துக் கொடுத்தனர். ஆனால் மன்னன் அவர்கள் கூறியதை நம்பாமல் மேலும் சில வீரர்களை கோயிலுக்கு அனுப்பி கோயில் முழுவதும் தேடச்சொன்னான்.
அவர்கள் கோயிலில் தேடிப்பார்த்து கானோபாத்திரை இல்லை என்றும் அர்ச்சகர்கள் கூறியது போல் தெற்கு பிரகாரத்தில் ஒரு புதிய விருட்சம் பூக்கள், இலைகளுடன் தோன்றியுள்ளதை கூறினர். மன்னர் கையில் இருந்த அர்ச்சகர்கள் கொடுத்த பிரசாதத்தைப் பார்த்தான். மாலையில் ஒரு நீண்ட ரோமம் இருந்ததைக்கண்டு திடுக்கிட்ட மன்னன், இறைவன் அணிந்த இந்த மாலையில் இந்த ரோமம் எப்படி வந்தது? என்றான். பாண்டுரங்கனின் கூந்தலாய் இருக்கலாம், என்றனர் அர்ச்சகர்கள். மன்னன் ஆலயத்திற்கு வந்து பார்த்தபோது பாண்டுரங்கன் குடுமியுடன் காட்சிதந்தார். மன்னன் மனம் தெளிந்தான். தெற்குபிரகாரம் சென்று விருட்சமாக மாறியுள்ள கானோபாத்திரையிடம் மன்னிக்க வேண்டினான். அவ்விருட்சத்தை மும்முறை வலம் வந்து, அம்மா! வயதில் இளையவளான உனது ஒப்புயர்வற்ற பக்தி, மனிதரில் கீழ்மகனான என் கண்களைத் திறந்தது. தீய எண்ணம் கொண்டு உனக்கு அபச்சாரம் செய்துவிட்டேன். இனி என் வாழ்நாள் எல்லாம் பாண்டுரங்கனுக்கு சேவை செய்வதிலேயே கழிப்பேன். இது சத்தியம், என்று அந்த விருட்சத்தின் மீது ஆணையிட்டான். பண்டரிபுரம் செல்பவர்கள் அந்த விருட்சத்தை வணங்கி அதன் இலைகளை பிரசாதமாக ஏற்று கானோபாத்திரையை வணங்கி சென்றனர். ஆலயத்தின் தெற்கு கோபுர வாயிலை கானோபாத்திரை வாயில் என்று இன்றும் அழைக்கின்றனர்.