பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
10:07
ஆதவன் தென் திசை பயணத்தை துவக்கும் ஆடி மாதம், நேற்று மவுனமாக பிறந்தது. இதை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், பக்தர்கள் இன்றி, பூஜைகள் நடத்தப்பட்டன.தை மாத பிறப்பான, உத்தராயண புண்ணிய கால துவக்கத்தை கொண்டாடுவது போல, ஆடி மாத தட்சிணாயன புண்ணிய கால பிறப்பையும், மக்கள் கொண்டாடி வருகின்றனர்.ஆடி மாதம் பிறந்ததில் இருந்து, இறுதி வரை, ஒவ்வொரு நாளும் தெய்வீக சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன.
சாஸ்திரங்கள், இம்மாதத்தை, சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன.ஆடி மாதம் முழுதும், அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கும். பக்தர்கள் பொங்கல் வைத்து, கூழ் வார்த்து, பால்குடம் ஏந்தி, உடலில் அலகு குத்தி அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவர்.இந்த காலத்தில், சூரியனின் ஒளிக் கதிர்கள், விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். விவசாயத்திற்காக செலவு செய்யும் காலம் என்பதால், திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்கள் செய்வதில்லை.ஆடி மாதத்தில், பகல் பொழுது குறைந்தும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்று, மழை அதிகம் இருக்கும். ஆடி, பீடை மாதம் என, பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. ஆனால், இந்த மாதம், மக்களை இறைவழியில் அழைத்துச் செல்லும், பீடு நிறைந்த மாதம் என்பதே உண்மை அர்த்தம்.
இம்மாதம் முழுதும், தெய்வ சிந்தனையில் இருப்பதால், வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்பதே உண்மை.ஆடி, மழை காலத்தின் துவக்கம். தொற்று நோய்கள் பல, இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில்களில், பிரசாதமாக இவை தரப்படுவதால், நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில், எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது.ஆனால், தமிழகத்தில், கொரோனா தொற்று, நான்கு மாதங்களாக ஆட்டிப்படைக்கிறது. இதனால், வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஆடி மாதம் நேற்று மவுனமாக பிறந்துள்ளது. கோவில்களில் பக்தர்கள் இல்லாமல், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.ஏராளமான பெண்கள், வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, வாசலில் நின்று அம்மனை தரிசித்தனர். - நமது நிருபர்-