பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
10:07
கந்தர் சஷ்டி கவசம் குறித்த ‘கறுப்பர் கூட்ட’ பதிவை கண்டித்து மற்றும் ஆடி கிருத்திகை முன்னிட்டும் வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் பக்தர்களால், பாராயணம் செய்யப்பட்டது. ஆடி கிருத்திகையான முருகனுக்கு உகந்த நாளான நேற்று வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் செய்தும் வழிபாடு நடத்தியும், கருப்பர் கூட்டத்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்து சமூக வலை தளங்களில் பதிவுகள் வெளியானது. இதை ஏற்று தமிழகம் முழுவதும், தங்கள் வீடுகளில் நேற்று கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். கிராம் பகுதி கோவில்களில் கந்தர் சஷ்டி கவசம் ஒலிபரப்பி, ஆடி கிருத்திகை வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூர் – அவிநாசி ரோடு, இ.பி., காலனியில் உள்ள கற்பக ஜோதி ராஜ விநாயகர் கோவிலில், ஆடி கிருத்திகை விழா, நேற்று நடந்தது. முருக பெருமானுக்கு, 18 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது; மலர் அலங்காரத்தில், முருகன் அருள்பாலித்தார். தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளி கடைபிடித்து, பக்தர்கள் வழிபட்டனர்.
ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோவிலுக்கு முன், பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி, ‘வெற்றிவேல்... வீரவேல்’ என்ற கோஷத்தை எழுப்பியபடியும் கோவிலை வலம் வந்தனர். ‘கறுப்பர் கூட்டம்’ அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவிநாசி, விஸ்வநாதர் கோவிலில், பஞ்சமூர்த்திகள் – 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய நபர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
– நமது நிருபர்கள் குழு –