மானாமதுரை: கொரோனா எதிரொலியாக போதிய ஆர்டர்களின்றி மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்படும். தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்லும்.
குறிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு இங்கு தயாராகும் சிலைகளுக்கு வரவேற்பு அதிகம். இதற்காக தொடர்ந்து 3 மாதங்கள் இப்பணியில் ஈடுபடுவர். இந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா ஊரடங்கால், ஆக.,22 ல் நடக்க உள்ள விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் கேட்டு பெரிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை. இதனால், சிலை தயாரிக்கும் பணி சுணக்கம் அடைந்துள்ளது. அதே நேரம் வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய வகை விநாயகர் சிலைகள் மட்டுமே தயாரிக்கின்றனர்.இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் பரமேஸ்வரி கூறியதாவது, கொரோனாவால் 50 சதவீத ஆர்டர் தான் கிடைத்துள்ளன. தற்போது சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது. பெரிய அளவில் வருவாய் இன்றி தவிக்கிறோம், என்றார்.