பதிவு செய்த நாள்
16
மே
2012
05:05
யாருக்காவது நோய் வந்து விட்டால், இதே மாதிரி தான், போன வருஷம் என் மாமனாருக்கும் வந்தது. மனுஷன் திடீர்னு போய் சேர்ந்திட்டார், என பயமுறுத்தக் கூடாது. நடப்பது நடக்கட்டும், தைரியமா இருங்க! உலகத்திலே யாருக்குத் தான் நோய் இல்லே, என ஆறுதல் மொழி சொல்ல வேண்டும். பரீட்சித்து மன்னனின் கதை கேட்டால் மனதில் தைரியம் உண்டாகும். மகாபாரதத்தில் முதல்வரான தர்மரின் பேரன் தான் பரீட்சித்து. கிருஷ்ணாவதாரம் முடிந்து, அவர் விண்ணுலகம் சென்றதும், அவரது பிரிவைத் தாங்காமல், பாண்டவர்களும் விண்ணுலகை அடைய முடிவெடுத்தனர். அப்போது பரீட்சித்துவை மன்னனாக்கினர். பரீட்சித்து தன் தாத்தா தர்மரை விட தர்மவானாக விளங்கினான். ஆனாலும், விதி யாரையும் விட்டதில்லையே! ஒருமுறை காட்டுக்குச் சென்ற அவனுக்கு தாகம் ஏற்படவே, தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரை தட்டி எழுப்பினான். முனிவர் தன்னிலைக்கு வரவே இல்லை. தன்னை அவர் மதிக்காததாக கருதி, அவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டு விட்டு போய்விட்டான். அந்த முனிவரின் மகனான சிருங்கி, இதை பெரிய அவமானமாகக் கருதி, தன் ஞானத்தால் இதைச் செய்தவன் பரீட்சித்து என்பதைத் தெரிந்து கொண்டு, பாம்பால் அழிவு வரட்டும், என சாபமிட்டார். இதைத் தெரிந்து கொண்ட பரீட்சித்து, தன் செய்கைக்காக வருந்தி, மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தான். மரணத்துக்காக அவன் கலங்கவில்லை.
தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். மகன் தந்தையை ஒரு மாளிகையில் அமர வைத்து, எவ்வழியிலும் பாம்பு உள்ளே புகமுடியாத படி செய்தான். ஒருநாள் கிளிமூக்கு கொண்ட சுகப்பிரம்ம முனிவர் அவனைக் காண வந்தார். அவர் மரணத்தின் இயல்பு பற்றி அவனுக்கு எடுத்துச் சொன்னார். பரீட்சித்து! மனிதன் மரணம் வரும் வேளையில் தான் தைரியமாக இருக்க வேண்டும். இவ்வளவு நாளும் பாவம் செய்திருந்தாலும் பரவாயில்லை. மரணம் வருவதற்குள் பாகவதக் கதைகளை படிக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் வரலாறை ஏழு நாட்கள் கேட்க வேண்டும். அவனது சரித்திரம் கேட்டு முடிந்து உயிர் பிரிந்தால், அவன் பிறவா நிலை அடைவான், என்றார். பரீட்சித்துவும் சுகப்பிரம்மர் சொல்லச் சொல்ல கதை கேட்டு ஆனந்தநிலையில் இருந்தான். சுகப்பிரம்மர் சென்றதும், அக்கதைகளை அசை போட்டுக் கொண்டே இருந்தான். நாராயணா...நாராயணா என வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. அப்போது பாம்புகளின் தலைவனான கார்க்கோடகன் வந்தான். பலத்த பாதுகாப்புக்கு நடுவே, பாம்பு வடிவில் அவனால் அரண்மனைக்குள் நுழைய முடியாது எனத் தோன்றியது. ஒரு அந்தணரின் வடிவம் தாங்கி, பரீட்சித்துவை பார்க்க விரும்புவதாக காவலர்களிடம் சொன்னான். அந்தணர்களை அரண்மனைக்குள் அனுமதிக்கலாம் என்பதால், கார்க்கோடகன் வேகமாக உள்ளே போனான். உள்ளே சென்றதும், பாம்பு வடிவாக மாறி, கொடிய விஷத்தைக் கக்கினான். அந்த விஷப்புகை, பரீட்சித்துவை சாம்பலாக்கி விட்டது. அவன் பிறவாநிலை பெற்று நாராயணனுடன் கலந்து விட்டான்.
இக்கதை மூலம், பெரியவர்களை அவமதிக்கக்கூடாது. மரணம் வரும் வேளையில், பயத்தை ஒதுக்கி விட வேண்டும். நாராயண நாமம் சொல்லியும், நாராயணனின் வரலாறு கேட்டும், பிறவா நிலை பெற வேண்டும்.