ராமேஸ்வரத்தில் யாத்ரி நிவாஸ் பெயர் அகற்றியதற்கு எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2020 01:08
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியில் யாத்ரி நிவாஸ் பெயர் அகற்றியதற்கு, பா.ஜ., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் அறநிலையத்துறை சார்பில் ரூ.29 கோடியில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் நுழைவுப்பகுதியில் யாத்ரி நிவாஸ் என தமிழில் எழுதினர். ஹிந்தி பெயரான அதை அகற்ற தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து அறநிலையத்துறை அப்பெயரை அகற்றியது.ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான வட மாநில பக்தர்கள் வருவர். இங்கு 200 க்கும் மேலான தனியார் விடுதிகள் உள்ள நிலையில், பக்தர்கள் சுலபமாக யாத்ரி நிவாஸ் பெயரை கூறி விடுதிக்கு வந்தடைவர்.
ஆனால் சிலர் எதிர்ப்பால் இப்பெயரை அதிகாரிகள் நீக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் மனு கொடுத்தனர்.பா.ஜ., மாவட்ட தலைவர் முரளீதரன் கூறுகையில், ராமேஸ்வரத்திற்கு 80 சதவீதம் வட மாநில பக்தர்கள் வருவதால், யாத்ரி நிவாஸ் விடுதியை எளிதில் அடையாள காணுவர். இதுபோல் தமிழகத்தில் பல முக்கிய கோயிலில் யாத்ரி நிவாஸ் விடுதிகள் உள்ளது. இங்கு பக்தர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திட சிலர் முயற்சிக்கின்றனர். எனவே அகற்றிய யாத்ரி நிவாஸ் பெயரை மீண்டும் வைக்க வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்துவோம், என்றார்.