உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக, திருப்பணிகள் நடந்து வருகிறது. உடுமலையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் செய்து, 2008ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், தற்போது, கோவில் மூலவர் கோபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், வர்ணம் பூசும் பணி, உற்சவ மூர்த்திகளுக்கு தனி சன்னதி என, திருப்பணிகள் துவங்கியுள்ளது.மேலும், இக்கோவில் ஆண்டுத்தேர்த்திருவிழாவில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் விழா சிறப்பாக நடக்கும். அம்மன் திருவீதி உலா வரும் தேர் பழமையானதாக உள்ளதால், திருக்கோவில் நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் அமைக்கப்பட உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. அனைத்தும் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 50 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் பணிகள் முடிந்துள்ளன; விரைவில் பணி துவங்கும், என்றனர்.