பதிவு செய்த நாள்
02
செப்
2020
03:09
பல்லடம்: செங்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பல்லடத்தில் நடந்த ராகு கேது பெயர்ச்சி விழாவில் பங்கேற்று, கலசம் ஏந்தி வழிபாடு செய்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, ஐந்து மாதங்களுக்கு பின், தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேற்று கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கோயில்கள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று, ராகு கேது பெயர்ச்சி விழாவும் கொண்டாடப்பட்டது. பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. காலை 6 மணி முதல், லட்சார்ச்சனை விழா, மற்றும் 1008 தீர்த்த கலச அபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கிரி ராகு-கேது பெயர்ச்சி விழாவில் பங்கேற்றதுடன், தீர்த்த கலசங்கள் ஏந்தியபடி கோவிலை வலம் வந்து, சிறப்பு யாகத்தில் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டார். வழக்கமாக, கட்சி தலைமைக்கு பயந்து, கடவுள் வழிபாடு நிகழ்ச்சிகளில், தி.மு.க.,வினர் பங்கேற்பதில்லை. அவ்வாறு பங்கேற்றாலும், ரகசியமாக வந்து செல்வது வழக்கம். தேர்தல் நெருங்கி வருவதால், தி.மு.க.,வினர் சிலர் ஆன்மீக அரசியல் பக்கம் சாய்ந்து வருகின்றனர். அவ்வாறு நேற்று, செங்கம் எம்.எல்.ஏ., கிரி பல்லடத்தில் திடீரென வழிபாடு நடத்தி சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.