பதிவு செய்த நாள்
11
செப்
2020
11:09
ஆற்றல் அறிந்த அறிஞர்கள்: பாரதி வாழ்ந்த காலத்தில், அவரின் ஆற்றலை அறிந்து மதித்தவர்களில், வ.வே.சு. அய்யர், வ.ரா., நெல்லையப்பர், சிங்காரவேலர், திருமலாச்சாரியார், புதுச்சேரி சீனிவாசாச்சாரியார் உள்ளிட்டோர் மதித்தனர். பாரதி, தன் தம்பி என வாஞ்சையுடன் அழைத்த, பரலி சு.நெல்லையப்பர் தான், 1917ல், அவர் பாடல்களை அச்சிட்டு வெளியிட்டார். அந்நுாலில், அவர் காலத்திற்குப் பின், எத்தனையோ நுாற்றாண்டுகளுக்குப் பின், தமிழக ஆண்களும், பெண்களும் பாடி மகிழும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன் என, எழுதியுள்ளார்.
மீசை பிறந்த கதை: பாரதிக்கு, 14 வயதிலும்; செல்லம்மாளுகக்கு, 7 வயதிலும், 1897, ஜூன், 15ல் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு அடுத்த ஆண்டு, பாரதியின் தந்தை சின்னசாமி இறந்தார். பெரும் கஷ்டத்துக்கு ஆளான பாரதி, காசியில் இருந்த தன் அத்தை கும்பம்மாள் வீட்டில் குடியேறினார். அங்குள்ள காசி இந்துக் கல்லுாரியில் கல்வி கற்றார். மெட்ரிகுலேஷன் கல்வியில் சிறந்தார். தொடர்ந்து, அலகாபாத் சர்வகலாசாலையில், புதுமுக வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்றார். 1902 வரை அங்கிருந்த பாரதி, மீசை வளர்த்து, கச்சம், வால்விட்ட தலைப்பாகை அணியும் பழக்கம் அப்போது தான் ஏற்பட்டது.
சிறைவாசம்: பாரதியார், 1912ல் தான், தன் புகழ்பெற்ற கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட நுால்களை எழுதினார்.கடந்த, 1918 நவ., 20ல், புதுச்சேரி எல்லையில் இருந்து வெளியேறி, பிரிட்டிஷ் எல்லையில் காலடி வைத்த போது, கைது செய்யப்பட்டு, 34 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தபின் விடுவிக்கப்பட்டார்.பின், மனைவியின் ஊரான கடையத்தில், இரண்டாண்டுகள் வறுமையில் வாடினார். எட்டயபுரம் மன்னருக்கு சீட்டுக்கவி எழுதி உதவி கேட்ட போதும், கிடைக்காததால் வறுமையில் வாடினார்.
பிடிவாதம்: தான் நினைத்ததை அடையும் பிடிவாதம் கொண்டவர் பாரதி. தினமும்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள யானைக்கு பழம் கொடுப்பது வழக்கம். ஒருநாள் யானை கட்டுப்பாடற்ற நிலையில் இருந்தது. பழம் கொடுக்க வேண்டாம் என, அதிகாரிகள் சொன்னதைக் கேட்காமல் பழம் கொடுத்த பாரதியை உதைத்து தள்ளியது யானை. அதுவே, அவர் இறப்புக்கு காரணமானது.சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த பாரதி, எமனை தன் காலருகே அழைத்து மிதிப்பதாக எழுதினார். தன், 39 வது வயதில் மறையும் வரை, அதே தைரியத்துடன் வாழ்ந்தார்.
நிறைவேறா ஆசை: சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை, சுயசரிதை உள்ளிட்டவை, பாரதி எழுதி முற்றுப்பெறாத நுால்கள்.தன் இளைய மகள் சகுந்தலாவுக்காகஎழுதியது தான், ஓடி விளையாடு பாப்பா எனும், குழந்தைகளுக்கான பாடல்.-பாரதியின் பாடல்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்ய, ஆர்மீனியன், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு
உள்ளன.
கடைசி உரை: பாரதி கடைசியாக சொற்பொழிவாற்றிய ஆங்கில உரையின் தலைப்பு, இம்மார்ட்டல் லைப் எனும், மரணமில்லா பெருவாழ்வு. அதன்பின், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
காந்தியடிகளுடன் சந்திப்பு: கடந்த, 1919, மார்ச் 19ல், சென்னை திரும்பினார். அப்போது, அரசியல் மேதையான காந்தியை, ராஜாஜியின் வீட்டில் சந்தித்தார். அதுதான், அவர்கள் சந்திப்பு முதலும், கடைசியுமாக அமைந்தது.
தந்தையர் நாடு: நாட்டை மண்ணாகவும், வேறு பொருளாகவும்பார்த்தவர்களுக்கு மத்தியில், நாட்டை கடவுளாக பார்த்த முதல் கவிஞன் பாரதி. நாட்டை தாய் நாடாக பாடியவர்களுக்கு மத்தியில், முதலில் நாட்டை தந்தை என்றும், மக்களை அதன் புதல்வர்கள் என்றும், அதைக் காப்பது கடமை என்றும் பாடிய முதல் கவிஞன்.
கடவுளுக்கே கட்டளை: தனக்கான கோரிக்கைகளை பாடலாக பட்டியலிட்டு, இவற்றை நீ, எனக்கு கொடுக்க கடமைப்பட்டவன் என, கடவுள் கணபதிக்கு கட்டளையிட்ட முதல் தமிழ்க்கவிஞன்.
பன்மொழி வித்தகர்: சமஸ்கிருதம் அறிந்தவர்கள் வேதம் அறிந்தவர்களாகவும், தமிழ் கற்றவர்கள் பண்டிதர்களாகவும் இருந்த நாட்களில், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என, பல மொழி கற்று, தமிழைப் போற்றி, தமிழ் கலாசாரத்தை பரப்பியவர் பாரதி.பிரும்மசூத்திரம், பகவத் கீதை, உபநிஷத்துக்களை சமஸ்கிருதத்தின் ஆதாரங்கள் என்ற போது, கம்பன், இளங்கோ, வள்ளுவனை தமிழின் ஆதாரங்கள் என்றவர் பாரதி.
ஆசிரியர் பணி: கடந்த, 1904, நவம்பரில், சென்னையில் வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில், துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.சக்கரவர்த்தினி மாத இதழிலும் பொறுப்பாசிரியராக இருந்தார். தொடர்ந்து, சென்னையில் இருந்து துவங்கிய, இந்தியா, பாலபாரதம் உள்ளிட்ட பத்திரிகைகளை பொறுப்பேற்று நடத்தினார்.
காக்கை காதலன்: கண்ணனுக்கு மயில் பீலியை இணைத்து காவியங்களும், ஓவியங்களும் தீட்டப்பட்ட போது, வறுமையில் இருந்த பாரதி, காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே எனப் பாடியவர்.
நகைச்சுவை: பாரதியார் சிறந்த புதுமைக் கவிஞர் எனத் தெரிந்த பலருக்கு, அவர் சிறந்த கதாசிரியர், கட்டுரையாளர், மேடைப் பேச்சாளர், பத்திரிகையாளர் என்பது தெரியாது. எதையும் கட்டளையாக பேசத் தெரிந்த பாரதிக்கு, நகைச்சுவை உணர்வு மிகுந்திருந்தது என்பதற்கு, காக்காக்கள் பார்லிமென்ட், சும்மா, கிளி, குதிரைக்கொம்பு, காற்று, மழை, கடல், மாலை நேரம், கடற்கரையாண்டி போன்ற வேடிக்கை கதைகள் தான் உதாரணங்கள்.
பல்கலை வித்தகர்: கற்பனை நிலையிலிருந்து மாறி, அறிவியல், வரலாறு அறிந்த கவிஞன். ஆன்மிகவாதியாக இருந்த போதும், பெண்ணியம், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளை விடாப்பிடியாக பின்பற்றியவர்.
தந்தையின் ஆசை: பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் தமிழில் புலமை பெற்றவர். நவீன பொறியியல், கணக்கு பாடங்களில் தேர்ச்சி பெற்றவர். ஆங்கிலப் புலமையும் உண்டு. தன் மகனை, அத்துறைகளில் செலுத்த எண்ணினார். ஆனால் பாரதி, எழுத்து துறையை தேர்ந்தெடுத்தார்.
அவலம்: பாரதி, திருவல்லிக்கேணியில் இறந்தபோதும், அவரை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும், மிகச்சிலர் மட்டுமே பங்கேற்றனர். அன்றைய தமிழ்ப் பத்திரிகைகள், அவரின் மரண செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்பது தான், அப்போதைய நிலை.
கோவில் கும்பாபிஷேகம்; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை, 12 வாரங்களில் மேற்கொள்ளும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டை கிராமத்தில், விஜய வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி மேற்கொண்டு, உரிய முறையில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தும்படி, அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், அரசு வழக்கறிஞர் ஆர்.வெங்கடேஷ், அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் ஜி.கே.முத்துகுமார் ஆஜராகினர்.இருதரப்பு வாதங்களுக்கு பின், 12 வாரங்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி, அறநிலையத் துறைக்கும், அரசுக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.