பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
மேல்மருவத்துார் : ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மஹாளய அமாவாசை, சிறப்பு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார், நேற்று, துவக்கி வைத்தார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், புரட்டாசி மாத, மஹாளய அமாவாசை விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நேற்று நடைபெற்றது.பின், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, உலக மக்கள் விடுபட்டு, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பவும், உலக மக்கள் அமைதி பெற்று, நிம்மதியுடன் வாழவும், எண்கோண வடிவ பெரிய யாக குண்டத்தில், கற்பூரம் ஏற்றி, சிறப்பு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார், துவக்கி வைத்தார். இதில், ஆதிபராசக்தி அறநிலைய தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பக்தர்கள், நவதானியங்கள், நவசமித்து குச்சி, காய்கறி, தானிய வகைகளையும், யாகத்தில் இட்டு அம்மனை வழிபட்டனர்.அரசின் விதிமுறைகளை பின்பற்றி, சானிடைசர், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும், பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், கடலுார் மாவட்டம், நெய்வேலி, பெண்ணாடம், பண்ருட்டிகளைச் சேர்ந்த சக்தி பீடங்களை சேர்ந்த நிர்வாகிகள் செய்தனர்.