பதிவு செய்த நாள்
04
அக்
2020
04:10
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, கரிய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அறநிலைய துறை விற்பனை செய்வதற்கு, ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பல்லாக்காபாளையத்தில், கரிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பல ஏக்கர் நிலங்கள் உள்ளன.இந்த கிராமத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதற்காக, சர்வே எண், 119ல் உள்ள, கோவிலுக்கு சொந்தமான, 9.25 ஏக்கர் புஞ்சை நிலத்தை, குடிநீர் வாரியத்திற்கு விற்பனை செய்ய அறநிலைய துறை முன்வந்துள்ளது.
இது குறித்த விளம்பரம்ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது குறித்து, குமாரபாளையம் வட்டார பொதுமக்கள் கூறியதாவது: குடிநீர் வாரியத்திற்கு விற்பனை செய்ய முன்வந்துள்ள கோவில் நிலம், எங்களின் முன்னோர்களால், கோவில் நன்மைக்காக தானமாக வழங்கப்பட்டது. அதில், வரும் வருமானத்தை கோவிலுக்கு தான் செலவு செய்ய வேண்டும்.அரசின் திட்டத்திற்காக, கோவில் நிலத்தை விற்பனை செய்யக்கூடாது. நாங்கள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறோம். கோவில் நிலம் அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில், நீண்டகால குத்தகைக்கு விடலாம்.கோவிலுக்கு வேறு இடத்தை, குடிநீர் வாரியம் பதிவு செய்து கொடுத்தால், கோவில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதைவிடுத்து தானமாக கொடுத்த நிலத்தை, பணமாக மாற்றுவது மிகவும் தவறு.
மேலும், கோவில் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக, ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், அந்த நிலத்தில் குடிநீர் வாரியம் திட்டப் பணிகளை துவங்கி இருப்பதும் கண்டிக்கத்தக்கது.அறநிலைய துறை கமிஷனருக்கு, பொதுமக்கள் சார்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் வாயிலாகவும், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அறநிலைய துறை கமிஷனர் ஆய்வு மேற்கொண்டு, ஊர் மக்கள் சம்மதத்துடன் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர்- -