பதிவு செய்த நாள்
14
அக்
2020
11:10
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வெயில் காலத்தில் பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.பிரசித்தி பெற்ற, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை, விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில், வெயில் காலத்தில் பக்தர்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. பக்தர்கள் நடந்து செல்ல, குறைந்த அளவில் தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. வெயிலால் சூடு படாத வகையில் நடப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கோவில் வளாகத்தில், பக்தர்கள் நடந்து செல்லும் பகுதிகளில், ஹீட் ரிப்ளக்டிவ் பெயின்ட் என்கிற, சூடு பரவாத பிரத்யேக வெள்ளை நிற வர்ணம் பூசியுள்ளனர்.பாதுகாப்பான முறையில், சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் நுழையும் பகுதியில், தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் நிறுவி, கை, கால் கழுவி செல்லவும், கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.அகலாத ஆக்கிரமிப்புகோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில், கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ரோடுகள் குறுகலாக மாறியதால், வாகனங்களில் செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, ஆனைமலை வருவாய்த்துறை, பேரூராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர். அலட்சியம் காட்டாமல், அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மற்ற கோவில்களில்...பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில், பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் தரைவிரிப்பு கூட விரிக்கப்படாமல் உள்ளது. இதனால், வெயில் காலத்தில், அனல் பறக்கும் தரையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல, ஹீட் ரிப்ளக்டிவ் பெயின்ட் பூசி, தரை விரிப்புகள் போடுவதற்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.