பதிவு செய்த நாள்
15
அக்
2020
05:10
ஈரோடு: ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோட்டில் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
ஈரோட்டில் மாணிக்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சூளை உள்ளிட்ட இடங்களில், பாரம்பரிய முறைப்படி கை வறுத்தல் மூலம், பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் பொரி தேவை இருந்தாலும், தைப்பூசம், ஆடித்திருவிழா, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து, பொரி உற்பத்தியாளர் கோபால் கூறியதாவது: ரசாயனம், பவுடர் கலப்படம் இல்லாமல், பாரம்பரிய முறைப்படி வறுத்தல் மூலம், பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென கர்நாடகா, 64 ரக பொரி அரிசியை, கொள்முதல் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் பொரியை, காங்கயம், கொடுமுடி, சென்னிமலை, அந்தியூர், பெருந்துறை, பவானி, ஜம்பை, பண்ணாரி, சத்தியமங்கலம் மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆயுத பூஜை என்றால், வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே, வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து விடுவர். இந்தாண்டு கொரோனாவாக இருந்ததால், தற்போதுதான் ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளன. இதுவரை, 50 சதவீத ஆர்டர்கள் வந்துள்ளன. 50 பக்கா கொண்ட, ஒரு மூட்டை பொரி, 520 முதல், 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை வாங்கி செல்லும் வியாபாரிகள், வண்டி வாடகை, கடை வாடகை, ஆள் கூலி உள்ளிட்டவை சேர்த்து, கட்டுப்படியாகும் விலையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.